SuperTopAds

வங்கிக்குள் 3 நாட்களாக தங்கியிருந்து 4 கோடி பெறுமதியான நகைகள் மற்றும் 10 லட்சம் பணம் கொள்ளை! சந்தேகநபரை மடக்கிய பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
வங்கிக்குள் 3 நாட்களாக தங்கியிருந்து 4 கோடி பெறுமதியான நகைகள் மற்றும் 10 லட்சம் பணம் கொள்ளை! சந்தேகநபரை மடக்கிய பொலிஸார்..

ஜா-எலயில் கூட்டுறவு கிராமிய வங்கியொன்றுக்குள் நுழைந்து 3 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து, பாதுகாப்பு பெட்டகத்தை துளையிட்டு பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடிய நபரை பேலியகொடை குற்றத்தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

குறித்த நபர் வங்கியின் சுவரை இடித்து பாதுகாப்பு பெட்டகத்தை துளையிடும் ஆயுதத்தால், இந்த குற்றச்செயலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பாதுகாப்பு பெட்டகத்தில் சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் 10 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தையும் திருடியுள்ளதுடன், வங்கியிலிருந்த CCTV கெமரா கட்டமைப்பை முழுமையாகக் கழற்றி எடுத்துச்சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், பாதுகாப்பு பெட்டகத்தை துளையிடுவதற்காக பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் பொருளை வங்கியிலிருந்து கண்டெடுத்த பொலிஸார், அதனூடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், ராகமையிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் CCTV கெமராவை பரிசோதித்த போது, ஒருவர் காரொன்றில் மூன்று தடவைகள் சென்று கிரைன்டருக்கு பயன்படுத்தப்படும் பிளேட், கையுறை, 

சிறிய சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றமை கண்காணிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கொழும்பை அண்மித்துள்ள இரவு களியாட்ட விடுதிகளுக்கு அடிக்கடி செல்பவர் என்பது தெரியவந்துள்ளது. 

அதனை அடிப்படையாக வைத்து கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல களியாட்ட விடுதியொன்றிலிருந்து சந்தேகநபர் வௌியில் வரும் போது அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கெஸ்பாவ - மடபாத, கஹபொல பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியிலிருந்து திருடிய தங்க ஆபரணங்களில் ஒரு பகுதியை சந்தேகநபர் தற்காலிகமாக தங்கியிருந்த ராகம ஹொரபேயிலுள்ள அறையில் பதுக்கி வைத்திருந்த நிலையில், பொலிஸார் கண்டுபிடித்தனர். 

அத்துடன், கிராமிய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை துளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரைன்டர் உள்ளிட்ட ஆயுதங்களும் சம்பவ தினத்தன்று அவர் அணிந்திருந்த ஆடைகளும் அந்த அறையிலிருந்தே கண்டெடுக்கப்பட்டன. 

மேலும் திருடிய தங்க ஆபரணங்களில் ஒரு பகுதியை கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைகள் சிலவற்றில் விற்று பெற்றுக்கொண்ட 24 இலட்சம் ரூபாவை கெசினோ விளையாட்டுக்கு செலவிட்டதாகவும் பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதேவேளை, 2023 ஆம் ஆண்டு வென்னப்புவ மனம்பிட்டிய கூட்டுறவு கிராமிய வங்கியின் ஜன்னல்களை கிரில்களால் துளையிட்டு உள்ளே நுழைந்து இதேபோன்று திருடியதாகவும் அந்தப் பணத்தில் தாம் தற்போது பயன்படுத்தும் காரை வாங்கியதாகவும் பொலிஸாரிடம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். 

இதனை தவிர 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஜா-எல, வெலிசறை, ராகம, மஹபாகே, கடவத்தை ஆகிய பகுதிகளில் தபால் நிலையம், சதொச மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் பாதுகாப்பு பெட்டகங்களை துளையிட்டு பணம் திருடிய சந்தேகநபர் இவர் தான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.