ஆட்சிக்கு வந்து 48 மணித்தியாலத்துக்குள் விசேட செயலணி!- இராணுவத்தினருக்கு சஜித் வாக்குறுதி.
பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றித் தந்தது போல திருடர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற இராணுவ வீரர்கள் எம்மோடு ஒன்றிணைந்துகொள்ள வேண்டும்.நாட்டின் அரசியல் அதிகாரம் சரியான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால் நாடு வளமான நாடாக மாறியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு நன்றி பாராட்டும் முகமாக நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ வீரர்களது மாநாட்டின் 6 ஆவது கட்டம் ஞாயிற்றுக்கிழமை மொனராகலையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் அதிகாரம் சரியான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால், இராணுவ வீரர்களால் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாத்துத் தரப்பட்ட எமது நாடு வளமான நாடாக மாறியிருக்கும். இப்போதும் நாட்டைக் காப்பாற்றும் பணி எம்முன் உள்ளது. திருட்டு, ஊழல், மோசடி, கொள்ளை மற்றும் தேசிய சொத்துக்கள் மற்றும் வளங்களை வீணடிப்பதை இல்லாதொழிக்க இராணுவ வீரர்கள் தலையிட வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்பும் மனிதாபிமானப் பணியில் பங்காளராகுமாறு இராணுவ வீரர்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் வலுவான சட்டக் கட்டமைப்பின் மூலம் நாட்டை அழித்த அனைவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவது போலவே, இழந்த வளங்கள் மற்றும் சொத்துக்கள், பணத்தை நாட்டுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தி குறுகிய காலத்தில் இராணுவ வீரர்களுடன் சமூக ஒப்பந்தத்தை எட்டியது. அந்த சமூக ஒப்பந்தம் மிகவும் முறையாகவும், ஒழுங்காகவும், வினைதிறனாகவும், மாவட்ட மட்டத்தில் திட்டமிட்ட முறையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 இராணுவ வீரர் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் இராணுவ வீரர்களின் ஆலோசனைகள் கருத்திற்கொள்ளப்பட்டதன் பின்னர் புதிய சமூக ஒப்பந்தம் எட்டப்படும். ‘திவிதென ரணவிரு வேலைத்திட்டம்’ என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்கள் நம் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தவர்கள். 220 இலட்சம் மக்களினது சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்து தந்தனர். அந்தப் பணி இன்னும் முடிவடையவில்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், மக்களை ஊக்குவிப்பதற்கும் இன்னும் பல கடமைகள் அவர்களுக்கு உண்டு. அவர்கள் நாட்டின் முக்கிய சமூக அபிவிருத்தி நீரோட்டத்தின் முன்னோடிகளாக மாற வேண்டும்.
நாட்டிற்காக சிறந்த சேவையாற்றிய இந்த இராணுவ வீரர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களை கவனித்துக் கொள்வோம். பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் இராணுவ வீரர்களது பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றினை தாபிப்பேன். இராணுவ வீரர்கள் தொடர்பான கட்டளைகள் காலத்திற்கு ஏற்றாற் போல் புதுப்பிக்கப்படும். ஒரே தரம் ஒரே ஓய்வூதியக் கொள்கையை ஆய்வு செய்து வருகிறேன், அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
ரணவிரு சேவா அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களும் ஏற்பாடுகளும் போதுமானதாக இல்லை. இராணுவ வீரர்களின் நலன்புரி செயல்பாடுகளுக்காக அமெரிக்கா தனித்த திணைக்களத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திணைக்களத்தின் ஊடாக இராணுவ வீரர்களின் நலனுக்காக அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் அவ்வாறானதொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, இராணுவ வீரர்களின் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்கும் நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும்.
ஓய்வு பெற்ற பிறகு மாற்று வருமான மூலங்களை தொடுவதற்கு படைவீரர்கள் விரும்புகிறார்கள். நாட்டிலுள்ள மக்கள் மத்தியில் அதிக தியாகங்களைச் செய்யக்கூடியவர்கள், தொழில் மற்றும் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொண்டவர்கள் என்பதனால், ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் தியாகத்திற்கு சரியான பெறுமானம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாற்று தொழில்கள் மற்றும் வருமான வழிகளை உருவாக்குவதற்கான பிரவேசத்தற்கு சலுகை அடிப்படையில் நிதி அணுகல் வழங்கப்படும்.
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் தற்போது பல்வேறு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தெளிவான, முறையான சம்பள ஒழுங்குமுறை மற்றும் காப்புறுதி முறைமை இல்லாத காரணத்தினால், திவி தென ரணவிரு நலன்புரி திட்டத்தின் கீழ் காப்புறுதி வழங்கப்படும். ஓய்வு பெற்றவர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிக வட்டி வீதம் கிடைத்து வந்தது, என்றாலும் தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வட்டி விகிதங்களை மீண்டும் வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம்.
மேலும் திவிதென ரணவிரு அமைப்பின் அடையாளத்தை பாதுகாக்க அடையாள அட்டைகள் வழங்கப்படும். எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுடனான யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட, ஆதரவற்ற குடும்பங்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும். யுதத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ் அரசாங்கம் அங்கவீனமுற்ள இராணுவ வீரர்களுக்கு தெளிவான அநீதி இழைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அந்தக் கடமைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.