முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு...
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், மே.18 சனிக்கிழமை நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடம் மற்றும், நந்திக்கடல், முள்ளிவாய்க்கால் பவுல் தேவாலயம் உள்ளிட்ட முல்லைத்தீவுமாவட்டத்தின் சில இடங்களில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் பிதிர்க்கடன் கிரிகைகளும் நிறைவேற்றப்பட்டதுடன், உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி தேவாலயம், மற்றும் கோவில்களில் ஆத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் உணர்வுபூர்வ ஆஞ்சலி
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி முள்ளிவாய்க்கால் பிரகடன உரை ஆற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றதில் சரியாக காலை 10:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்திலே தன்னுடைய கணவனை இழந்த முள்ளியவளைப் பகுதியைச்சேர்ந்த கோவிந்தராசன் புனிதவதி என்பவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனையடுத்து சம நேரத்தில் ஏனைய உறவுகளும் தங்களுடைய உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மத தலைவர்கள்,
அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மலரஞ்சலி செலுத்தினர்.
விசேடமாக முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இடம்பெற்று ஒன்றரைத் தசாப்தகாலம் நிறைவுற்றுள்ள சூழலில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திற்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard வருகை தந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் கப்பலடிக் கடற்கடையில் இறந்தவர்களுக்கு பிதிர்க்கடன்
இந் நிலையில் முள்ளிவாய்க்கால் கப்பலடிக் கடற்கரையில், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு சைவ முறைப்படி பிதிர்கடன்களை நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெற்றன.
குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பெருமளவில் இந்த பிதிர்க் கடன்களை நிறைவேற்றும் கிரிகை வழிபாடுகளி கலந்துகொண்டிருந்தனர்.
பவுல் தேவாலயத்தில் ஆத்மசாந்தி வழிபாடும், நினைவேந்தலும் இடம்பெற்றது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் பவுல் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு விசேட ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேவாலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் முல்லைத்தீவு பங்குத்தந்தை அகஸ்ரின் அடிகளாரின் தலைமையில் பவுல் தேவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறிப்பாக தேவாலய வளாகத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட் இடத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி பங்குத்தந்தை சக்திவேல் அவர்களால் பொதுச்சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்ந்து ஏனைய நினைவுச்சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி, கண்ணீர் சொரிந்து பொதுமக்கள் பலரும் அஞ்சலிசெலுத்தினர்.
உயிர்நீத்தவர்களுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
இதேவேளை முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மே (18) அதிகாலை நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிராத்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வு மற்றும், ஆத்மசாந்திப் பிராத்தனைகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.