முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துவந்த ஆசாமி கைது!
வாடகைக்குச் செல்வதாகக் கூறி முச்சக்கர வண்டிகளில் ஏறி சாரதிகளிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி முச்சக்கரவண்டிகள் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை மற்றும் மொரட்டுவை உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவாகியிருந்த பல்வேறு குற்றச் செயல்களை அடிப்படையாக கொண்டு அங்குலானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வாடகைக்குச் செல்வதாகக் கூறி முச்சக்கர வண்டிகளில் ஏறி சாரதிகளிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி 2 முச்சக்கரவண்டிகள்,
2 கையடக்கத் தொலைபேசிகள், நகைகள் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளதாகவும் மேலும், மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் முச்சக்கர வண்டி சாரதிகளைத் தாக்கி பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து இரண்டு முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.