கறுப்பு சித்திரை என்ற பெயருடன் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்திற்கு மோட்டார் சைக்கிள் பவணி
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக ரீதியான பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக 21 ஆவது நாளாகவும் போராட்டம் கறுப்பு சித்திரை என்ற பெயருடன் இன்று (14) முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மோட்டார் சைக்கிள் பவணி ஒன்று இளைஞர் கழகங்கள் விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் கறுப்பு கொடி ஏந்தப்பட்டு பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பமாகி மணல்சேனை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு துரைவந்தியன் மேடு துறைநீலாவணை பெரிய நீலாவணை மருதமுனை பாண்டிருப்பு கல்முனை நகரப்பகுதி ஊடாக சென்று மீண்டும் பிரதேச செயலக முன்றல் நோக்கி வந்தடைந்ததுடன் பல்வேறு கோஷங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் முற்பகல் பிரதே செயலகத்தின் முன்பாக கறுப்பு பொங்கல் பானையில் இடப்பட்டு பொங்கப்பட்டது.இந்நிலையில் அங்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் நீதிமன்ற கட்டளைப்படி பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் பொதுச்சொத்துக்கள் சேதமாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்காக போராட்டக்காரர்கள் என மூவரின் பெயரை குறிப்பிட்டு அப்பகுதியில் கடிதம் ஒன்றினை வழங்கினர்.
இதனால் அங்கு சிறு பதற்றம் எற்பட்டது.பின்னர் பிரதேச செயலகம் மீது திணிக்கப்படும் நிருவாக அடக்கு முறைக்கும் அத்துமீறல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என இன்று கறுப்பு சித்திரையாக பிரகடனப்படுத்துவதாகவும் எனவே பிரதேச செயலகத்திற்கான நிருவாக உரிமையை வென்றெடுக்க அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரி நின்றனர்.