தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வருடமாக புதுவருடம் அமைய வேண்டும் - வட மாகாண ஆளுநர்
பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில் இன, மத நல்லிணக்கத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு தேசிய பண்டிகையாக சித்திரை புதுவருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வருடமாக மலரும் புதுவருடம் அமைய வேண்டும் என வட மாகாண ஆளுநர் தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் கூறியதாவது :
தமிழ் மக்களின் பாரம்பரியம், தொன்மை என்பவற்றுக்கமைய சித்திரை 14ஆம் நாள் புது வருடம் பிறக்கிறது. அதற்கமைய இந்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி குரோதி எனும் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புது வருடத்தில் சாந்தியும் சமாதானமும் மேலோங்கி, வறுமை நீங்கி, எல்லா வளங்களுடனும் அனைவரும் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதே தினத்தில் சிங்கள மக்களும் தங்களின் புதுவருடப் பிறப்பை கொண்டாடுகின்றனர். பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில் இன, மத நல்லிணக்கத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு தேசிய பண்டிகையாக சித்திரை புதுவருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வருடமாக மலரும் புதுவருடம் அமைய வேண்டும்.
வருடப்பிறப்பின்போது பின்பற்றப்படுகின்ற சம்பிரதாயபூர்வ நடவடிக்கைகள் எம்மவர்களின் மரபுகளை தொடர்ச்சியாக பேணுகின்ற ஒன்றாகவே திகழ்கிறது. அந்த வகையில், மருத்துநீர் வைத்துக் குளித்தல், புத்தாடை அணிதல், நறுமணங்களை பூசிக்கொள்ளுதல், மத வழிபாடுகளில் ஈடுபடுதல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல், கைவிசேடம் வழங்கல் ஆகிய செயற்பாடுகளினூடாக மரபுகள் பேணப்படுகின்றன. அத்துடன் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள், கலை நிகழ்வுகளூடாக நல்லிணக்க செயற்பாடுகளும், சமரசமாக வாழும் தன்மையும் ஏற்படுகிறது.
“இனி என்னை புதிய உயிராக்கி, எனக்கேதும் கவலையரச்செய்து, மதி தன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கமைய, புது வருடத்தில் புதிய சிந்தனைகளை எம்மில் தோற்றுவித்து, மகிழ்ச்சி பொங்கும் வளமான வாழ்வை பெற இறையாசி வேண்டி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.