SuperTopAds

தமிழரசின் புதிய நிர்வாகத் தொிவை இரத்துச் செய்ய நீதிமன்றில் இணக்கம்! கட்சி நலனுக்காகவாம்..

ஆசிரியர் - Editor I
தமிழரசின் புதிய நிர்வாகத் தொிவை இரத்துச் செய்ய நீதிமன்றில் இணக்கம்! கட்சி நலனுக்காகவாம்..

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை கட்சியின் நலன் கருதி இரத்துச் செய்வதற்கு உடன்படுவதாக கட்சியின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை (29) தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான வழக்கு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவின் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சட்டத்தரணி கே.வி.தவராஜா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

திருகோணமலையில் ஜனவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டமும் அதன் தெரிவும் அத்துடன் ஜனவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஆகியவற்றை இரத்துச் செய்யக்கோரிய வழக்கு விசாரணைக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த கோரிக்கைக்கு நாம் உடன்பட்டோம். அதற்கான காரணத்தையும் நாம் நீதிமன்றில் முன்வைத்தோம். அதாவது, குறித்த வழக்கானது ஒரு சமூகத்திற்கு எதிராக, கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்காகும். 

இதனை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்வோமேயானால் அது சமூகத்திற்கு செய்கின்ற துரோகமாகவும், கட்சியின் பாதிப்புக்கு நாங்களும் ஒரு காரணமாக இருந்ததாகவும் அமைந்துவிடும். 

எனவே கட்சியினதும் மக்களினதும் நலனினை கருத்தல் கொண்டு குறித்த வழக்கினை விரைவாக முடிவுறுத்துவதற்கு இவ் வழக்கில் எதிராளியாக குறிப்பிட்டு வருகை தந்த அனைவருடைய சம்மதத்தின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்த தரப்பினரின் வேண்டுகோளுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதனை ஏற்றுக் கொண்டோம். 

எமது தரப்பில் இரண்டு விடயங்களை முன்வைத்திருந்தோம் அதாவது வழக்கு தாக்கல் செய்த தரப்பினர் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி வழக்கை மீளப்பெற வேண்டும். 

இல்லாவிட்டால் அவர்களின் வேண்டுகோளை முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டு வழக்கை முடிவுறுத்துவது என்பதாகும். 

அந்தவகையில் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டோம். எமது நோக்கம் வழக்கை விரைவாக முடிவுறுத்துவதேயாகும் அதைத்தவிர யார் வெல்வது, யார் தோற்பது என்பது அல்ல எனினும் துரதிஷ்டவசமாக இன்றையதினம் ஆறாவது எதிரியாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. 

எனவே அவருடைய நிலைப்பாட்டை அறிவதற்காக வழக்கு வருகின்ற ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். குறித்த வழக்கு தொடர்பாக பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட கட்டாணை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணானது எனவும், இடம்பெறவுள்ள மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரியும் திருகோணமலை சாம்பல்தீவு - கோணேசபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவரினால் மாவை சேனாதிராஜா, எஸ்.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட 

தமிழரசுக் கட்சியின் ஏழு முக்கியஸ்தர்களை எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டை நடாத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து மாவட்ட நீதிமன்றானது கட்டானையொன்றினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.