SuperTopAds

தமிழ் அரசியல் கைதி மீது சிறையில் கொலைவெறி தாக்குதல்! விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
தமிழ் அரசியல் கைதி மீது சிறையில் கொலைவெறி தாக்குதல்! விசாரணைகள் ஆரம்பம்..

தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதீபன் என்ற தமிழ் அரசியல் கைதி, சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் விஜேதாச ராஜபக்கசவின் கவனத்திற்குக் கொண்டுவந்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையில் ஒரு குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், மெகசின் சிறைச்சாலை அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவிக்கின்றார்.

நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு இந்த விடயம் தொடர்பில் கடந்த 5ஆம் திகதி விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க மேலும் தெரிவிக்கின்றார்.

மெகசின் சிறைச்சாலையில் கடமையாற்றாத, அதேவேளை தேடுதல் நடவடிக்கைக்காக வந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பிரதீபன் என்ற தமிழ் அரசியல் கைதியைத் தாக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடும் நோக்கில், ஜனவரி மாதம் 26ஆம் திகதி மெகசின் சிறைச்சாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், 

பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். “இந்த மெகசின் சிறைச்சாலையில் இருக்கும் பிரதீபன் என்று அழைக்கப்படும் அரசியல் கைதி ஒருவரை வெளியிலிருந்து வந்த சிறைச்சாலை பொலிஸ் என்ற குழுவினர் இந்த மெகசின் சிறைச்சாலையில் கடமை புரிகிறவர்கள் அல்ல, 

வெளியிலிருந்து வந்த ஒரு யூனிட்டைச் சேர்ந்தவர்கள் அந்த பிரதீபன் என்றவரைத் தாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக அங்கே வெளியிலிருந்து வந்து தாக்கியவர் கடந்த காலத்திலே ஒரு இராணுவத்திலே இருந்திருக்கின்றார். 

அவர் இங்கே உள்ளே வந்தபொழுது, அவர் இங்கே ஒரு சர்ச் யூனிட் ஒன்றிற்கு வந்ததாகவும் அங்கே வந்தபொழுது இவரைத் தாக்கியிருக்கிறார்.

”இதுத் தொடர்பில் மெகசின் சிறைச்சாலை நிர்வாகத்திடம் வினவியதோடு, அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடமும் இதுத் தொடர்பில் கலந்துரையாடியதாக இரா.சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.