துறைமுக அதிகாரசபையின் செலவில் 50 எம்.பிக்கள் 2 கப்பல்களின் உல்லாசப் பயணம்!
துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டினார்.
மக்கள் பெரும் துன்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கடலில் பார்ட்டி வைத்துள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை, இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த இரண்டு சிறிய இழுவைப் படகுகளையும் ஒதுக்கியுள்ளதுடன், இவற்றில் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்து உணவு மற்றும் குளிர்பானங்களையும் அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த உல்லாசப் பயணத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு கப்பல்களும் துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணலை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு காப்புக் கப்பல்கள் எனவும் துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த இன்ப பயணத்திற்காக துறைமுக அதிகாரசபை 25 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவினால் தயாரிக்கப்பட்ட இந்த இன்ப பயணத்திற்கு தேவையான உணவு மற்றும் பானங்கள் மற்றும் பொருட்களின் பட்டியலை வழங்குமாறு திங்கட்கிழமை துறைமுக அதிகார சபையின் தலைவரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடிதத்தின் படி, சீஸ் சாண்ட்விச்கள், வெண்ணெய் கேக், ரோல்ஸ், ஐஸ் காபி, பேப்பர் கப், சிறிய கண்ணாடி, கரண்டி மற்றும் முட்கரண்டி, சிறிய தட்டுகள், நாற்காலிகள் (கவர்களுடன்) ஒவ்வொரு வகையிலும் 55, 60 தண்ணீர் போத்தல்கள் , 5 டிஷ்யூ பாக்கெட்டுகள் , 10 நாற்காலிகள் மற்றும் மேசைகள் கொண்ட கூடாரமொன்று கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த கடிதத்தில் எம்.பி.க்களுக்கு உணவு வழங்க 5 துறைமுக ஊழியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களும் டிசம்பர் 13 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டின் ஆரம்பத்திற்காக அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தயார்படுத்தப்பட்ட கொழும்பு துறைமுக வளாகத்தின் குறுகிய கடற்படை சுற்றுப்பயணத்தில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தனித்தனியாக அழைப்பிதழ்களை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.