இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆன் உள்ளிட்ட அரச தூதுக்குழுவினரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அன்புடன் வரவேற்றார்.
அதன் பின்னர் இளவரசி ஆன் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் இளவரசி ஆனும் பதிவைச் செய்துள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.