இலங்கையர்கள் என்பது தற்போது பொது அடையாளம் அல்ல!
சிங்களவர்கள் மாத்திரம் இலங்கையர்களாக அடையாளப்படுத்தப்பட்டதன் காரணமாக தமிழர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியி்ன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள ரீதியில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சில அரசியல் கட்சிகள் பெயர்களை சூட்டி, கட்சி பெயரிலும் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு எனவும் இதனை வலியுறுத்தும் வகையில் சிறிலங்கா நீதி அமைச்சரின் இன்றைய நாடாளுமன்ற உரை அமைந்திருந்த அதே வேளை , இலங்கையில் உள்ள வேறு எவரும் எந்தவொரு கருத்தையும் முன்வைக்க முடியாது, இனவாதத்தை தூண்டும் வகையில் சில அரசியல் கட்சிகள் அதன் பெயரை கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது மாத்திரமே சிலரின் எண்ணமாக உள்ளது, இதனை தாண்டி வேறு கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் பயங்கரவாதிகளாக கருதப்படுவார்கள்.
முதலில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட தரப்பினர் தற்போது சிங்களவர்கள் என குறிப்பிடப்படுகிறார்கள்.இந்த நிலையில், எமக்கான அடையாளம் என்ற ஒன்று இல்லை. இலங்கையர்கள் என்பது தற்போது பொது அடையாளம் அல்ல. இதனாலேயே, எமக்கான அடையாளத்தை நாம் உருவாக்க நேரிட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.