சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

ஆசிரியர் - Editor IV
சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை. இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (11.01.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாடாளுமன்றத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சமஷ்டியே நாட்டை காப்பாற்றக் கூடியது என கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.

ஆனால் சமஷ்டி என்றால் என்ன? அதன் உள்ளடக்கம் என்ன? என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. 

இதேவேளை ஒற்றை ஆட்சி முறைமையை தமிழ் மக்கள் தம்மை அடக்கி ஆழும் என்ற ஒரு எண்ணப்பாட்டிலும் சமஷ்டி ஆட்சிமுறைமை தமது இறைமையை இழப்பது போன்று பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் ஓர் அறியாமை நிலவி வருகின்றது.

ஆனாலும் ஒற்றை ஆட்சியை பொறுத்தவரை அது ஒன்றினைந்திருந்த ஐக்கிய இராட்சியத்தின் பிரித்தானியா, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, ஐரிஸ் பிரச்சினைகளை தீர்க்க வழிவகுத்துள்ளது அத்துடன் பிரித்தானியாவில் மன்னராட்சி முறைமை இருந்தபோதிலும் அங்கு ஜனநாயக வழிமுறையில் ஒற்றை ஆட்சியூடான நடைமுறையே உள்ளது. ஆகவே இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்குடன் செயற்பட்டு வருகின்றது. அதேவேளை இரு தேசம் ஒரு நாடு என்ற கருத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சொல்லி வருகின்றது. அவர்கள் அவ்வாறு கூறுவதற்கு தேர்தல் அரசியலே காரணம்.  

இதேநேரம் சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது. அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது. அதில் மத்தியிலுள்ள அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறக் கூடாது என்பதுடன் அதில் மத்திய அரசும் தலையிடக் கூடாது என்பதில் நாம் மிகவும் தெளிவாகவே இந்ருந்து வருகின்றோம்.

இதேநேரம் ஒற்றை ஆட்சிக்குள் பிரச்சினையை தீர்க்க முடியாதென்ற நிலைப்பாட்டுக்கு நாம் வரவில்லை. ஆனால் அப்படித் தடை இருக்குமாயின் அது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட வேண்டும்.

எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் நிலவிய பால நாடுகளுக்கு சென்று ஆராய்ந்து வந்துள்ளார். அதனடிப்படையில் நாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டில் வலுவாக உள்ளோம்.

சமஷ்டடி என்பது தேர்தல் கோசம். 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.   ஜனாதிபதி கூட நடைமுறைப்படுத்துவதில் தடை இருக்காது என கூறியுள்ளார். 

ஐநா சபையின் மனித உரிமை பேரவை கூட இதனையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றது. எமது மக்களுடைய அரசிலுரிமைக்கான வழிமுறை என்பது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் பொறிமுறை என்பது தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பதும் எமது நிலைப்பாடு.

ஆயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது வழிமுறைக்கு வருகின்றபோதும் பொறிமுறைக்கு வரவில்லை. அவர்கள் கூறுவது ஐநாவில் முறையிடுவோம் சர்வதேசத்துக்கு கூறுவோம் என  ஏமாற்று அரசியலையே செய்ய முனைகின்றனர்.

ஆகவே அனைவரும் சொல்லாடல்களை கைவிட்டு சொல் மயக்கங்களை வைத்து மக்களை குழுப்பிக்கொண்டிருப்பதை விடுத்து அரசியல் பிரச்சினைக்கான தீர்வை உறுதியான வகையில் எமது அரசியல் உரிமைக்கான தீர்வை நோக்கி நகர மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் கூயாட்சி என்ற இலக்குடன் பயணிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு