SuperTopAds

புயலால் வலுவிழந்த 3 படங்கள்!

ஆசிரியர் - Admin
புயலால் வலுவிழந்த 3 படங்கள்!

இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு வருடமும் பல நூறு படங்கள் வெளிவந்து மக்களின் மனதில் இடத்தை பிடிக்க மற்றும் வசூல் வேட்டையை ஆரம்பிக்க என படாத பாடு படுகிறது. கருத்து சொல்ல வந்த படங்களோ கருத்தை சொல்லாமலே போய்விடும் கலிகாலமடா இது.     

சாதிக்க துடிக்கும் அறிமுக இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பங்களிப்புடன் சிறந்த கதை, தரமான கதைக்களம், சிறப்பான நடிப்பு, இசை என படத்திற்கான அத்தனை அம்சங்களும் இருந்து சிறிய பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டியிட்டு தியேட்டர் பிடித்து வெளிவரவே படாத பாடு பட்டு கொண்டு இருக்கும் போது இயற்கையும் தன் பங்குக்கு போட்டியாக வந்து நிற்பது மிகப்பெரும் துயரமே.

டிசம்பர் முதல் வாரத்தில் வெளியான அன்னபூரணி, பார்க்கிங், நாடு போன்ற படங்கள் சிறப்பான கதை அம்சத்துடன் கருத்தை விதைத்து மக்களின் மனதில் இடம் பிடிக்க போராடிக் கொண்டிருக்க வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் தியேட்டர்கள் அனைத்தும் காட்சிகளை ரத்து செய்தது.

இதனால் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த படங்கள் அனைத்தும் தற்காலிகமாக அதே இடத்தில் நின்று முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கருத்து சொல்ல வந்த படங்கள் அனைத்தும் தனக்குரிய நிலைமையை எண்ணி கதறுகிறது.

பெண் என சமையல் அறையில் முடங்காமல் செஃப் ஆகிய தீருவேன் என்று நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணியும் முதலில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தாலும் இயற்கையின் வலிமையால் வலுவிழந்து போயிருந்தார் அன்னபூரணி. ஐந்து நாள் முடிவில் 2.83 கோடியை தொட்ட இப்படத்தின் வசூல் இதற்கு பின் நாயகிக்கு கொடுத்த சம்பளம் ஆறு கோடியை ஆவது எட்டி விடுமா என தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டு உட்கார்ந்திருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், இளவரசன் நடிப்பில் வெளியான பார்க்கிங். மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் ஈகோ, தப்பு என்று தெரிந்தும் அதை பின்வாங்க மறுக்கும் பிடிவாத குணம், இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என அத்தனையையும் மக்களின் மனதில் பார்க்கிங் பண்ண இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா மெனக்கெடுத்து இருக்கிறார். 6 கோடியில் எடுக்கப்பட்ட படம் வெளிவந்த ஐந்து நாள் முடிவில் கிட்டத்தட்ட 2.65 கோடியை எட்டி உள்ளது.

பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் மகிமா நம்பியார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நாடு. “மலை கிராமம், மருத்துவமனை உண்டு, ஆனால் மருத்துவர் இல்லை. வந்த மருத்துவரை தக்க வைக்க மக்கள் போடும் திட்டம்” இதுவே நாடு. சுகாதாரம், படிப்பு, போக்குவரத்து, மருத்துவம் என பொது பிரச்சனைக்காக அரசாங்கத்தை குறை சொல்லாமல் அதை தீர்ப்பதற்கு மக்களை சிந்திக்க வைக்க துடிக்கிறார் இயக்குனர் சரவணன். சிறப்பான கதை அம்சத்துடன் கூடிய இப்படத்தின் வசூல் கிட்டதட்ட கோடியை கூட எட்டவில்லை என்பது வருத்தத்திற்குரிய தகவல்.