பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் மோர்கல்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளரக இருந்த தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கல் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோர்னே மோர்கல் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னர் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக பதவிவகித்தார்.
அவர் ஆளுகையிலான பாகிஸ்தான் அணி இலங்கை டெஸ்ட் தொடர், அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர் மற்றும் ஆசியக் கிண்ணத் தொடர் என்பவற்றில் விளையாடியதோடு, இந்தியாவில் நடந்துவரும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரிலும் பங்கேற்றிருந்ததோடு தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகாமலும் வெளியேறியிருந்தது.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட தொடர்களில் வேகப்பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் செயற்பட்டிருக்கவில்லை. இவ்வாறாக விடயங்கள் காணப்படும் நிலையிலையே மோர்னே மோர்கல் தனது பதவியினை இராஜினாமா செய்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேநேரம் பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தின் பின் அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், பாகிஸ்தான் இந்த தொடரிற்கு முன்னதாக வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் ஒருவரினை நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.