யாழ்.காங்கேசன்துறை ஐனாதிபதி மாளிகையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பார்வையிட்டார்.
குறித்த ஜனாதிபதி மாளிகையானது தனியார் பல்கலைக் கழகத்திற்கு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்,
நேற்று காலை இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதாவது, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியினால், தொழில்நுட்ப பூங்கா உட்பட 8 அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணி உட்பட அடையாளப்படுத்தப்படட காணிகளை வழங்குமாறு இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள், ஏற்கனவே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளில் முறையான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை, தற்போது தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளமையினால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு நஸ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், புதிய திட்டங்களுக்கான அனுமதிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மாளிகையை தனியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்குவது தொடர்பில் தீர்மானகரமான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கபடவில்லை என்றே தான் நம்புவதாகவும்,
குறித்த மாளிககை்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தலைமையிலான குழுவொன்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.