நீதிபதி சரவணராஜாவுக்கு அச்சுறுத்தலும் இல்லை, அவரின் இராஜினாமா கடிதத்தை நாம் ஏற்கவுமில்லை!! நீதி அமைச்சர்...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவின் இராஜிநாமாக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரங்களும் இல்லை.
நீதவானாக இருந்தபோது இவரால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
எனவே, இவர் எந்த உள்நோக்கத்துக்காக இதுபோன்ற அடிப்படையற்ற விடயங்களை முன்வைத்து பதவியை இராஜினாமாச் செய்வதற்கு தீர்மானித்தார் என்பது புதிராகவுள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று (18) சபையில் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்து பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தினூடாக தனக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் என்பவற்றின் காரணமாக தனது பதவியை இராஜிநாமாச் செய்வதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அக் கடிதத்தில் உயிர் அச்சுறுத்தல் தொடர்பான விபரமோ அல்லது மன அழுத்தத்துக்கான காரணமோ தெளிவாக குறிப்பிடவில்லை.
ஆனால், நீதிபதி எனும்போது அவர் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை. மன அழுத்தம் என்பதை பெரிதுபடுத்தினால் நாட்டிலுள்ள நீதிபதிகள் சகலரும் அவர்களின் பதவிகளை இராஜிநாமாச் செய்யவே நேரிடும்.
நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த மன அழுத்தம் என்றவொரு விடயத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால் அது குற்றமாகும்.
அவ்வாறு அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அதுதொடர்பில் தெரியப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அவருக்கு தனியான அதிகாரம் இருக்கிறது.
ஆனால் அவர் அந்த அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தாமல் 23 ஆம் திகதி எழுதிய கடிதத்தை 27 ஆம் திகதியே ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அவர் கொழும்பிலேயே இருந்துள்ளார். அதன்போது தூதுவர்கள் இருவரை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.
அவரின் காரை விற்பனை செய்து அதனூடாக பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். அவரின் கடவுச்சீட்டை அமெரிக்காவில் பதிவான தொலைபேசியினூடாகவே பதிவு செய்துகொண்டுள்ளார். அவ்வாறெனில் இவ் விடயத்திலும் பல்வேறு சந்தேகத்துக்கிடமான கேள்விகள் எழுகின்றன.
இது தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவும் விசாரணையை முன்னெடுத்திருந்தது. இதுதொடர்பில் வாக்குமூலம் பெறக்கூடிய சகலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, அவர்களின் தேடுதல்களுக்கமைய மூன்று விடயங்கள் தெளிவாகியுள்ளன.
சரவணராஜாவின் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது போன்று நீதிச் சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகளிடமோ அல்லது அவருடன் நெருங்கி தொழிலாற்றியவர்களிடமோ தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாகவும் தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அறிவிக்க அவர் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
ரி.சரவணராஜா முல்லைத்தீவு மாவட்ட நீதவானாக நீதமன்ற ரீதியாக வழங்கிய உத்தரவுகள் மற்றும் பணிப்புகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் அவர் சார்பில் சட்டமா அதிபரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு செப்டெம்பர் 23 ஆம் திகதியை அண்மித்த தினங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட்டிருந்தாலும் அதன்போது மேற்குறிப்பிட்டது போன்று உயிர் அச்சுறுத்தலோ மன அழுத்தமோ இருப்பதாக அவர் எந்தவொரு விதத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை.
இவரை சட்டமா அதிபர் அலுவலகத்துக்கு அழைப்பதற்கான எந்தவொரு அவசியமும் சட்டமா அதிபருக்கு இருக்கவில்லை. சட்ட மா அதிபர் அவரை அழைத்திருக்கவுமில்லை.
அதேபோன்று நீதவானாக இவர் வழங்கிய தீர்ப்புகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. இவர் அந்த வழக்குகளில் பதிலளிக்க கடமைப்பட்டவராகவும் இருக்கிறார்.
மேலும், இதுதொடர்பில் தான் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் ஆலோசனையும் கேட்டுள்ளார். அதன் பலனாக அவர் அரசின் உயர் அதிகாரியொருவர் என்பதால் தன்சார்பில் பிரசன்னமாகுமாறு சட்டமா அதிபரிடம் கோரியுள்ளார்.
இதற்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்திருந்தபோதும் இருவருக்குமிடையில் வேறு எந்த தொடர்பும் இருக்கவில்லை. எனவே, சட்ட மா அதிபரினால் எந்தவொரு அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை.
இறுதியாக ரி.சரவணராஜா 2023.09.25 ஆம் திகதியிலிருந்து 07 நாட்களுக்கு நோயாளர் ஒருவரை பார்ப்பதற்காக இந்தியா, தமிழ்நாட்டுக்குச் செல்வதற்கு வெளிநாட்டு விடுமுறை கேட்டுள்ளார். ஆகவே, செப்டெம்பர் 25 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் முதலாம் திகதி வரை விடுமுறையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இல்லை. ஆனால், எமது நீதித்துறை மீதுள்ள
நம்பிக்கையை இல்லாமலாக்கும் வகையிலும் பாரிய பிரச்சி னையாக்க முயற்சித்தமை கவலைக்குரியதாகும். அதுமாத்திரமல்லாமல் இவருக்கு எதிராகவும் அவரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாரதூரமான குற்றச்சாட்டை அவரின் மனைவியே நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் முன்வைத்திருக்கிறார்.
அதற்கு ஆணைக்குழுவினால் அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் அவரின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ள விரும்பவுமில்லை. அவரின் இராஜிநாமாக் கடிதத்தை நீதிச் சேவை ஆணைக்குழு இதுவரையில் பொறுப்பேற்கவுமில்லை. இவ்விவகாரத்தில் ஆணைக்குழு இறுதித் தீர்மானத்தை எடுக்கும்.
அதில் நாங்கள் தலையிடப்போவதுமில்லை. அதற்கான அதிகாரமும் எங்களுக்கு இல்லை என்றார்.