சச்சின், கெயில் சாதனைகளை தகர்த்து புதிய வரலாறு படைத்த ரோஹித்
ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று புதன்கிழமை டெல்லியில் நடைபெற்ற 9 ஆவது போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இப் போட்டியில் 273 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு அணித்தலைவர் ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக ரோகித் சர்மா அதிரடியாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விரைவாக ஓட்டங்களை சேர்த்தார். அந்த வகையில் 30 பந்துகளிலேயே அதிரடியாக விளையாடி அரைச் சதம் அடித்து அசத்தினார்.
அவர் பெற்ற அந்த 50 ஓட்டத்துடன் அவர் உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்தார். அத்துடன் உலகக் கிண்ண வரலாற்றில் வேகமாக 1000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற டேவிட் வார்னரின் உலக சாதனையையும் அவர் சமன் செய்தார்.
அதை விட அதிரடியாக 3 சிக்சர்களையும் அடித்த அவர் டெஸ்ட், ஒருநாள், ரி-20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற மேற்கிந்தியதீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து மாபெரும் புதிய உலக சாதனையை படைத்தார்.
அந்த பட்டியல், ரோகித் சர்மா 554 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், கிறிஸ் கெயில் 553 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும், ஷாஹித் அப்ரிடி 476 சிக்சர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.