3ம் நாள் அகழ்விலும் ஒன்றும் சிக்கவில்லை! முன்னாள் போராளி வழங்கிய துப்பு.. தப்பானது..
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடிகடந்த மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவந்தன.
இவ்வாறு இடம்பெற அகழ்வுப்பணிகளில் எவ்வித பொருட்களும் மீட்கப்படாத நிலையில், குறித்த அகழ்வுப்பணிகள் பெருத்த ஏமாற்றத்துடன் செப்ரெம்பர் (27) நேற்று முடிவிற்கு வந்தன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால், மேற்கு பகுதியில் விடுதலைப்புலிகள் காலத்தில் தங்கம், ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் புதைக்கப்பட்டதாக வவுனியாவடக்கு - நெடுங்கேணி, சின்னடம்பன் பகுதியைச்சேர்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஜெயசிங்கம் சஞ்சீவன் என்பவர் அம்பாறை பொலிஸ் தலைமை காரியாலயத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதற்கமை அம்பாறை பொலிஸ் தலைமைக்காரியாலயப் பொலிசார் இந்த விடயத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு கொண்டுசென்று அகழ்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இந்த விடயம் முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டு, முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியோடு குறித்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன்படி கடந்த (25)ஆம் திகதி, திங்களன்று குறித்த இடத்தில் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த அகழ்வுப்பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், பொலிசாருக்குத் தகவல் வழங்கிய முன்னாள் விடுதலைப்புலி அமைப்பின் போராளி ஜெயசிங்கம் சஞ்சீவன், அம்பாறை பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிட்சகர் ரி.ஜெயசேன, தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடையவியல் பொலிசார், இராணுவத்தினர், குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன.
அந்தவகையில் கடந்த (25)ஆம் திகதி இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வுப்பணிகளில் சில தகரங்கள் மாத்திரம் இனங்காணப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து கடந்த (26)ஆம் திகதியும் இரண்டாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படபோது, அகழப்பட்ட குழியிலிருந்து நீர் ஊற்றெடுத்த காரணத்தினால், அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு, நீர் இறைக்கும் மின் மோட்டர்களைப் பயன்படுத்தி குழியிலுள்ள நீரை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதுடன், இரண்டு சிறிய கனகர இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான சூழலில் குறித்த அகழ்வுச் செயற்பாடுகள் மூன்றாவது நாளாக செப்ரெம்பர் (27)நேற்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது காலையில் நீர் இறைக்கும் மின் மோட்டர்களைப் பயன்படுத்தி குழியில் ஊற்றெடுத்திருந்த நீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு குறித்த அகழ்வுப் பணிக்கு பெரிய கனகரக இயந்திரம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நண்பகல் (பெக்கோ) இயந்திரத்தை குறித்த இடத்திற்கு வரவளைத்து மூன்றாவது நாள் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டன.
இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல்வழங்கிய ஜெயசிங்கம் சஞ்சீவன் என்னும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளி அகழ்வுப் பணிக்கென மேலதிகமாக ஒருமணிநேரம் வழங்குமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபனிடம் கோரியநிலையில், மேலதிகமாக ஒருமணி நேரம் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு நீதிபதி அனுமதித்திருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து மேலதிகமாக இடம்பெற்ற அகழ்வுப்பணிகளின்போதும் எவ்வித தங்கங்களோ, ஆயுதங்களோ இனங்காணப்படாத நிலையில் அகழ்வுப்பணிகளை நிறுத்தி, அகழப்பட்ட குழியை மூடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அதற்கமை பெருத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற அகழ்வுப்பணிகள், பெருத்த ஏமாற்றத்துடன் நிறைவிற்கு வந்தன.
குறித்த அகழ்வுப் பணியின்போது 13அடி, பத்து அங்குலம் ஆழமானதும், பாரிய அகலமான குழி தோண்டப்பட்டதில் குறித்த பகுதியிலிருந்த ஆலமரம், பனைமரம், நாவல் மரம் உள்ளிட்ட பல மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் இவ்வாறு அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற குறித்த பகுதியில், அனுமதியின்றி அகழ்வுகளை மேற்கொள்வதற்கு பலதடவைகள் முயற்சிகள் இடம்பெற்றதாகவும், அவ்வாறு முயற்சி மேற்கொண்டர்களை பொலிஸார் கைதுசெய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.