பீடி உற்பத்தியாளரை அடித்து 14 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற முயற்சித்த மதுவரி திணைக்கள அதிகாரிகள் பணி நீக்கம்...

ஆசிரியர் - Editor I
பீடி உற்பத்தியாளரை அடித்து 14 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற முயற்சித்த மதுவரி திணைக்கள அதிகாரிகள் பணி நீக்கம்...

பீடி உற்பத்தியாளர் ஒருவரை தாக்கி இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்ய மதுவரி ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து கண்டறிந்து, தரம் பாராமல் சட்டத்தை அமுல்படுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

வலஸ்முல்லையில் உள்ள பீடி உற்பத்தியாளரின் உரிமம் கடந்த ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், இதன் காரணமாக கடந்த 18ஆம் திகதி தங்காலை மதுவரி பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று உற்பத்தியாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தீர்வு காணும் வகையில் பீடி உற்பத்தியாளரிடம் 14 இலட்சம் ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த நபரை முச்சக்கர வண்டியில்  கடத்திச் சென்று தாக்கி 10 இலட்சம் ரூபா பணத்தினை பலவந்தமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வௌியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக பீடி உற்பத்தியாளர் வலஸ்முல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இதில் தொடர்புடைய 05 சந்தேக நபர்களை நேற்று (25) கைது செய்தனர்.

தங்காலை மதுவரி பிரிவின் பொறுப்பதிகாரி, இரண்டு மதுவரி கட்டுப்பாட்டாளர்கள், மதுவரி கட்டுப்பாட்டாளர் பிரிவின் சாரதி மற்றும் இராணுவ சார்ஜன்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு