தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்/ தங்கம் தேடி அகழ்வு! முதல் நாள் அகழ்வில் தகரங்கள் மீட்பு, இன்றும் தொடருமாம்...
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால், கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகள் காலத்தில் புதைக்கப்பட்ட பொருட்களைத்தேடி செப்ரெம்பர் (25)நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பகுதியில் இறுதிக்கட்ட யுத்தகாலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் தங்கம், பணம் உள்ளிட்ட சொத்துக்கள் புதைக்கப்பட்டதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடையவியல் பொலிசார், இராணுவத்தினர், குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த முதலாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது சில தகரங்கள் மாத்திரம் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்துடன், முதலாம் நாள் அகழ்வுப்பணிகள் நிறைவுக்குவந்திருந்தன.
அதேவேளை தொடர்ந்து இரண்டாம் நாள் அகழ்வுப்பணிகள் செப்ரெம்பர் (26)இன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.