SuperTopAds

இந்திய நிறுவனத்திடம் அமைச்சர் பந்துல 5 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியது உண்மை!

ஆசிரியர் - Admin
இந்திய நிறுவனத்திடம் அமைச்சர் பந்துல 5 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியது உண்மை!

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்திய நிறுவனத்திடம் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றார் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இவரை போக்குவரத்து அமைச்சு பதவியில் இருந்து நீக்கி, உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என புகையிரத சேவையை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகத்துறை அமைச்சு உள்ள காரணத்தால் அவர் தனக்கு ஏற்றாற் போல் ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.அவருக்கு எதிராக நான் குறிப்பிட்ட விடயங்களுக்கு ஊடகங்கள் கவனம் செலுத்த கூடாது என அவர் ஊடகங்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

புகையிரத பாதை அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இந்திய நிறுவனம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு 5 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக நான் முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து கலக்கமடைந்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன எப்படிப்பட்டவர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. சாட்சியங்களுடன் தான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தேன்.எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்பேன்.

தனது அரசியல் அந்தஸ்த்தை பயன்படுத்தி தனது குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுவது அடிப்படையற்றது.இவரது மூத்த மகன் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி,ஊடகத்துறை அமைச்சின் தனிப்பட்ட செயலாளராக பதவி வகிக்கிறார்.மகள் அமெரிக்காவில் உள்ள இலங்கைக்கான தூதரகத்தில் மூன்றாம் நிலை அதிகாரியாக உள்ளார்.இவ்வாறு மருமகன்,மைத்துனன் என அனைவருக்கும் அரசாங்கத்தில் உயர்மட்ட பதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவை பதவி நீக்கி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம்.

புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த இவர் அதிக அக்கறை கொண்டுள்ளார்.மறுசிரமைப்பு திட்டங்கள் தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடவில்லை.புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்னெடுக்கும் முறையற்ற செயற்பாடுகளை எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம் என்றார்.