SuperTopAds

இணக்கப்பாடு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு

ஆசிரியர் - Editor II
இணக்கப்பாடு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடத்தப்பட்ட ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களில், இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ முடிவெடுத்தது.

புளொட்டும் அதிருப்தி நிலையில் இருக்கின்ற போதிலும், வெளிப்படையாக எந்தக் கருத்துக்களையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகிறது.

அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், பேச்சுக்களில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாவிடின், நியாயமான ஆசனப்பங்கீடு அமையாவிடின், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு புளொட் முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த வட மாகாண அமைச்சர் சிவநேசன் தெரிவித்துள்ளார்.

எந்தக் கட்டத்திலும், கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதில்லை என்றும் புளொட் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்த ரெலோ, ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடாத நிலையில், தனித்துப் போட்டியிடும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.