உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக (ICC) விசாரணை மேற்கொள்ள வேண்டும்-எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக (ICC) விசாரணை மேற்கொள்ள வேண்டும்-எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக (ICC) ஒரு பாராதூரமான விடயமாக கருதி சட்ட ஏற்பாடுகளையும் விசாரணை பொறிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தற்போது முஸ்லீம் மக்கள் மீது சிலர் சுயநலத்திற்காக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தொடர்பில் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பு திங்கட்கிழமை(11) இரவு இடம்பெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு கருத்து தெரிவித்த அவர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அரசியல் முதலைகளும் அதனை கட்டுப்படுத்துகின்ற பெரிய ஊடக நிறுவனங்களும் அன்று ஒரு பிழையான கண்ணோட்டத்தில் நாட்டில் சமூக சேவை செய்த அமைப்புகள் இஸ்லாமிய அமைப்புகள் முஸ்லீம் தலைவர்களை கூட கண்டி தலதா மாளிகையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு இராஜனாமா செய்ய வைத்தார்கள்.அன்று அரசில் இருந்த 13 க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சுப்பதவியை இராஜனாமாச் செய்திருந்தோம்.
அந்த அளவிற்கு தெற்கில் பாரிய முஸ்லீம் விரோத அரசியல் வீசியது.அக்கால கட்டத்தில் இந்த நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல ஏழை வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்விக்கு நிதியுதவி செய்த அமைப்புகள் பாடசாலைகளின் உட்கட்டமைப்புகளை மேற்கொண்ட பல முஸ்லீம் அமைப்புகள் தடை செய்யப்பட்டன.அந்த அமைப்புகள் மீதான விசாரணைகள் கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற நிலையில் சேவை மனப்பாங்கு கொண்ட 5 அமைப்புகள் தொடர்பில் தடை நீக்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் குறித்த 5 அமைப்புகளும் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.இதே வேளை தேசிய பாதுகாப்பினை விரும்புகின்ற நாம் குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய கோட்பாட்டில் நடாத்தப்பட்ட தாக்குதலாக பார்க்காமல் அரசியல் தேவைக்காக ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கிய உத்தியாகவே இந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நாம் பார்க்கின்றோம்.
தற்போது உள்ள மனித உரிமை ஆணையாளர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என கூறியிருக்கின்றார்.எனவே ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக (ICC) இத்தாக்குதலை ஒரு பாராதூரமான விடயமாக கருதி சட்ட ஏற்பாடுகளையும் விசாரணை பொறிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். என்றார்.