ஒன்றன் மேல் ஒன்றாக மிக நெருக்கமாக காணப்படும் எலும்பு கூடுகள், விடுதலை புலிகளின் தகடு மீட்கப்பட்டது உண்மை...

ஆசிரியர் - Editor I
ஒன்றன் மேல் ஒன்றாக மிக நெருக்கமாக காணப்படும் எலும்பு கூடுகள், விடுதலை புலிகளின் தகடு மீட்கப்பட்டது உண்மை...

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்பதை இனங்காண்பதில் சவால்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஐந்தாவதுநாளாக (11) நேற்று இடம்பெற்ற நிலையில், அகழ்வுப் பணிகளின் நிறைவில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) புதனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (11) நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

ஐந்தாம்நாள்  அகழ்வாய்வுகள் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,

ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகளில் இரண்டுமனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு துப்பாக்கி ரவையும் தடயப் பொருளாக எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றின் மீது ஒன்று மிக நெருக்கமாகவும், பல அடுக்குகளாகவும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் காணப்படுகின்றன. எனவே எத்தனை மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளன என்பதை தற்போது இனங்காணமுடியாதுள்ளது.

படிப்படியாக அகழ்வுகளை மேற்கொண்டு, மனித எச்சங்களின் மேலுள்ள மண்ணை அகற்றும்போதுதான் எத்தனை மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் உள்ளன என்பதை இனங்காண முடியும்.

இன்னும் ஓரிரு தினங்களில் எத்தனை எலும்புக்கூட்டுத்தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ள என்பதை தெரிவிக்கமுடியும்.

அதேவேளை கடந்த செப்ரெம்பர்(08) வெள்ளியன்று இரண்டு மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்தம் 04 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை 14மீற்றர் நீளத்திலும், 3மீற்றர் அகலத்திலும், 1.5மீற்றர் தொடக்கம் 2மீற்றர் வரையான ஆழத்திலும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு கடந்த செப்ரெம்பர் (09) சனிக்கிழமையன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தகடு ஒன்று எடுக்கப்பட்டது. அதுதொடர்பில் பின்னர் அறியத்தரப்படும் என்றார்.

மேலும் குறித்த ஐந்தாம் நாள் அகழ்வுப்பணிகள் இடம்பெறும் இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வருகைதந்திருந்ததுடன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு