5ம் நாள் அகழ்வு பணிகள் ஆரம்பம்! ஊடகங்களுக்கு இன்றும் வாய்ப்பூட்டா..?
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக திங்கட்கிழமை (11) தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்றும் ஐந்தாம் நாள் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்று வருகின்றன.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் திங்கட்கிழமை (11) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ,
தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஞாயிற்றுக்கிழமை (10) அகழ்வுப் பணிகள் இடம்பெறவில்லை திங்கட்கிழமை (11) ஐந்தாவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
அத்தோடு நான்காம் நாள் அகழ்வுப்பணியின் போது விடுதலைப்புலி அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் அகழ்வாய்வுகள் தொடர்பில் அன்றையதினம் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருந்த யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய அகழ்வாய்வு தொடர்பான முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவார்களா? அல்லது இன்றைய முடிவுகளையும் வழங்க மறுப்பார்களா? என்ற சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.