கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை 5ம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்!

ஆசிரியர் - Editor I
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை 5ம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் இம்மாதம் 05 செவ்வாய்க் கிழமையன்று மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி மனித எச்சங்கள் சில இனங்காணப்பட்டதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் கடந்த ஜூலைமாதம் 06ஆம் திகதி பூர்வாங்க அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறித்தபகுதி மனிதப் புதைகுழி என உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் தொடர்பான வழக்குவிசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில், ஆகஸ்ட் (31) நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் எதிர்வரும் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலவலர்பிரிவில் நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர், நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக கனகரக வாகனத்தினால் குழிதோண்டியபோது, கடந்த ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று மனித எச்சங்கள் சில இனங்காணப்பட்டன.

இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து அப்பகுதி குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அத்தோடு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த ஜூன்மதம் 30ஆம் திகதியன்று குறித்த பகுதிக்கு நேரடிராகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில்  குறித்த மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் உத்தரவிற்கமைய, சட்டத்தரணிகள், சட்டவைத்திய அதிகாரி, தடையவியல் பொலிசார், அரசியல்வாதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புகள் ஆகிய தரப்புக்களின் முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் 06அன்று பூர்வாங்க அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு இடம்பெற்ற பூர்வாங்க அகழ்வுப் பணிகளின் பிரகாரம் 13 இடங்களில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டதுடன், அவ்வாறு இனங்காணப்பட்டஇடங்கள் தடயவியல் பொலிசாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் குறித்தபகுதி ஒரு மனிதப் புதைகுழி என உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறு பூர்வாங்க அகழ்வின் மூலம் குறித்த பகுதி மனிதப் புதைகுழி என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, கடந்த ஜூலைமாதம் காலை 10.00மணியளவில் ஆரம்பமான பூர்வாங்க அகழ்வுப்பணிகள் மாலை 03.00மணியுடன் நிறுத்தப்பட்டன.

அத்தோடு  குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் ஜூலை மாதம் 13திகதியன்று முல்லைத்தீவு நீதிமன்றில், அகழ்வுப்பணிகளுடன் தொடர்புடைய திணைக்களங்கம் மற்றும், அமைப்புக்களுடன் விசேடகலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படும் எனவும் அந்த கலந்துரையாடலின் பின்னரே குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் குறித்த பூர்வாங்க அகழ்வுப் பணிகளின் நிறைவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதியன் முல்லைத்தீவு நீதிமன்றில் அகழ்வுப் பணிகளுடன் தொடர்புடைய அமைப்புக்கள், திணைக்களங்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றில் இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தன.

அந்தவகையில் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் அகஸ்ட்மாதம் 31இம் திகதி நேற்றும் இடம்பெற்றிருந்தன.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில் இம்மதம் 05ஆம் திகதி குறித்த கெிக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியை அகழ்வாய்வு செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.


குறித்த வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.கே.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, வி.எஸ்.எஸ் தனஞ்சயன், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகளான எஸ்.துஸ்யந்தி, ஜெகநாதன் தர்ப்பரன், 

முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேசசசெயலர் உமாமகள் மணிவண்ணன், கொக்குத்தொடுவாய் மத்தி கிராமஅலுவலர், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் கா.சண்முகதாசன், 

கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பொலிஸ்மாஅதிபர் சமுத்திரஜீவ, முல்லைத்தீவு உதவிபொலிஸ் அத்தியட்சகர் அசோகபெரேரா, கொக்கிளாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தடையவியல் பொலிஸ் பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர் முன்றிலையாகியிருந்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு