நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல!
நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக எமது மக்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடிய வகையிலும், தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடிய வகையிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளையே நிறுத்துமாறு கோருகின்றோம் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெற்கில் அனுபவிக்கும் சுதந்திரத்தை தாம் வடக்கில் அனுபவிப்பதற்கு இடமளிக்க வேண்டும் என வலியுறுத்தி பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர் கொழும்பு இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'எமது செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. அதேபோன்று தமது கருத்துக்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை சகலருக்கும் உண்டு. அதனை நாம் மறுதலிக்கவில்லை' என்று தெரிவித்தார்.
அதேவேளை தாம் ஒருபோதும் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், வட, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீண்டகாலமாக மதவழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அப்புறப்படுத்துமாறு தாம் கோரவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், மாறாக எமது மக்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடியவகையிலும், தமிழர்களின் தொல்லியல்களை அழிக்கக்கூடிய அடையாளவகையிலும் செயற்பாடுகளை நிறுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.
'தொல்பொருள் சின்னம் அல்லது பௌத்த சின்னம் என்ற பெயரில் தமிழ்மக்களின் அடையாளங்களையும் சரித்திரத்தையும் அழிப்பதற்கோ அல்லது மாற்றியமைப்பதற்கோ நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதனை முன்னிருத்தியே நாம் செயற்பட்டுவருகின்றோம்' என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.