10 லட்சம் பணத்துடன் காணாமல்போனதாக கூறப்பட்ட வர்த்தகர் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது!
காணாமல்போனதாக கூறப்பட்ட கொலன்ன வர்த்தகர் வெள்ளிக்கிழமை (18) இரவு மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹானை பகுதியில் உள்ள அவரது நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது குறித்த வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை தெனியாய பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு வேன் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் குறித்த வர்த்தகர் காணாமல்போயுள்ளார்.
இது குறித்து வர்த்தகரின் மனைவி கொலன்ன பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த வர்த்தகர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வேனின் சாரதி ஆசனத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட நிலையில், வர்த்தகர் பயணித்த வேன் கொலன்ன பனிங்கந்த பகுதியிலுள்ள பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளது.
தேயிலை கொழுந்து சேகரிக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குறித்த வர்த்தகர் கடந்த 16 ஆம் திகதி தெனியாய பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று பணத்தை
எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சந்தர்பத்தில் அணில்கந்த பிரதேசத்தில் வைத்து காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.