கடவுச் சீட்டை பெற்றுத் தருவதாக கூறி அழைத்துச் சென்று துஷ்பிரயோகம்! நகைகளும் கொள்ளை..
கொழும்பு - வத்தளையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணின் இடைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடவுச்சீட்டை மீளப் பெற்றுத் தருவதாகக் கூறி அழைத்து,
இங்கிரிய பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதிக்கு கூட்டிச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி 810,500 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விபசார நடவடிக்கை காரணமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து இடைநிறுத்தப்பட்ட வீசாவை மீளப் பெற்றுத் தருவதாகக் கூறி சந்தேக நபர் குறித்த பெண்ணை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து இங்கிரிய பிரதேசத்துக்கு வருமாறு கூறியுள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண் அவரைச் சந்திப்பதற்காக இங்கிரிய பிரதேசத்துக்குச் சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து, சந்தேக நபர், அந்தப் பெண்ணை சைக்கிளில் காட்டில் உள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்து தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.