SuperTopAds

துணிவிருந்தால் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்! - கஜேந்திரகுமார் சவால்.

ஆசிரியர் - Editor IV
துணிவிருந்தால் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்! - கஜேந்திரகுமார் சவால்.

தமிழர்கள் ஒற்றையாட்சியை கோருகிறார்களா ? அல்லது சமஷ்டியாட்சி கோருகிறார்களா? என்பதை அறிய துணிவு இருந்தால் மக்கள் வாக்கெடுப்பு நடத்துங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசுக்கு சவால் விடுத்தார்.     

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமைஇடம்பெற்ற வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தின் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யுத்த குற்றவாளியாக கருதப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக செயற்படுகிறார்.

இவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார், நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்து தரகுறைவாக பேசியுள்ளார். இவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உலகில் எங்கும் இவ்வாறான தன்மை கிடையாது.

ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்க நாட்டில் பல சட்டங்கள் காணப்படுகின்றன ஆனால் அவை நடைமுறையில் செயற்படுத்தப்படுவதில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர போன்றோரால் நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டம், சட்டம் ஒழுங்கு, பொறுப்புக்கூறல் ஆகியன கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் சபையில் சிங்கள மொழியில் உணர்வுபூர்வமாக உரையாற்றினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் அரசியல்வாதிகளை விமர்சித்தார், சமஷ்டி பிரிவினைவாதத்தை தூண்டும், தெற்கு இளைஞர்களை தூண்டி விட வேண்டாம் என குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு குப்பை என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள், ஆனால் அறிவு உள்ள கலாநிதி சுரேன் ராகவன் சமஷ்டி பிரிவினைவாதத்தை தூண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே அவரின் புலமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் ஒற்றையாட்சியில் வாழ விரும்புகிறார்களா? அல்லது சமஷ்டியை கோருகிறார்களா ? என்பதை அறிய மக்கள் வாக்கெடுப்பை முதுகெடும் பு இருந்தால் நடத்துங்கள் அதனை விடுத்து குறுகிய அரசியல் நோக்கத்துக்காக கொள்கையை விட்டுக் கொடுத்து செயற்பட வேண்டாம் என்றார்.