யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்! ஒரு மாத காலக்கெடு விதித்த அமைச்சர்..
யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய காலப்பகுதியில் இடமாற்றத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட சமுத்தி தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தினால் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களில் பணி இடமாற்றங்கள் வழங்கப்படுவது நடைமுறையாக உள்ள நிலையில் அதனை யாரும் மீறக்கூடாது.
மாவட்டத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் இடமாற்றம் பெறாத சமுர்த்தி உத்தியோதர்கள் ஒரே பிரதேசத்தில் கடமையாற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அது மட்டுமல்ல அது சில உத்தியோகத்தர்கள் அருகருகே உள்ள பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் உரியவர்கள் தலையீடு செய்து சரியான இடமாற்றங்களை ஒரு மாத காலத்துக்குள் செய்ய வேண்டும்.
மேலும் சில உத்தியோகத்தர்களின் சேவை அப்பிரதேசத்திற்கு அவசியம் என கருதினால் மாவட்ட செயலகத்துடன் கலந்துரையாடி தீர்வுகளை எட்ட முடியும்.
சில சமுர்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு சம்பள பிரச்சனை தொடர்பில் என்னிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் சமுர்த்திப் பணிப்பாளர் நாயகத்துடன் பேசி இருக்கிறேன்.
அவர் நான் எடுக்கும் முடிவுகளின் பிரகாரம் அதனை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கின்ற நிலையில் அதனை நான் விரைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
ஆகவே சமுர்த்தி உத்தியோத்தர்கள் கிராமத்தில் உங்கள் சேவையை ஆற்றுவதோடு சமுர்த்தி பயனாளிகளை வீட்டு விவசாயத்தில் ஊக்குவிப்பதற்கு சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.