இராணுவத்தை கேலி செய்ததாக குற்றச்சாட்டு!! -நகைச்சுவை குழுவுக்கு 17 கோடி அபராதம் வித்த சீன அரசு-
சீன இராணுவம் குறித்து கேலி செய்ததாக தெரிவித்து, நகைச்சுவை குழுவுக்கு 17 கோடி ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில், ஷியாகோ என்ற ஊடக குழு செயல்பட்டு வருகிறது. அக்குழு, நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு, இளம் நகைச்சுவை கலைஞர்களை ஊக்குவித்தும் வருகிறது.
அண்மையில் இக்குழு சார்பில், தலைநகர் பிஜீங்கில் நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று பேசிய கலைஞர் லி ஹாஷி என்பவர், தான் வளர்க்கும் நாய்கள் அணிலைத் துரத்துவதைப் பார்க்கும் போது, அவற்றுக்கு போர்களை வெல்லும் திறன் இருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பான 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதை விமர்சித்த பலரும், லி ஹாஷி சீன இராணுவத்தை மறைமுகமாக கேலி செய்திருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான முறைப்பாட்டின் வழக்குப் பதிந்து விசாரித்த பிஜீங் கலாசாரம் மற்றும் சுற்றுலா பணியகம், ஷியாகோ குழுவினர் தேசிய உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகக் கூறி, அதற்கு 17 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து, பிஜீங், ஷாங்காய் நகரங்களில் திட்டமிடப்பட்டிருந்த அக்குழுவினரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் கால வரையின்றி ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே, தன் செயலுக்கு, லி ஹாஷி வருத்தம் தெரிவித்தார்.