வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான பெண்ணுக்கு எதிராக 48 முறைப்பாடுகள் பதிவு..
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குருணாகல் நீதிவான் நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவுக்கமைய குறித்த பெண், வெளிநாட்டுக்கு சென்றிருந்து நாட்டுக்கு வந்த சந்தர்ப்பத்தில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டு,
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஒப்படைத்துள்ளதுடன், அங்கு குறித்த பெண் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் வெளிநாட்டு முகவர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து, ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து, ஒரு கோடியே 10 இலட்சத்துக்கும் அதிக பணம் பெற்றுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள பெண் மற்றும் மேலும் இரண்டு பேருக்கு எதிராக 48க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கைதுசெய்யப்பட்டுள்ள பெண் மற்றும் மேலும் இரண்டு பேர் ருமேனியாவில் ஹோட்டல் ஒன்றில் 2 இலட்சம் மாத சம்பளம் உள்ள தொழிலை பெற்றுத்தருவதாக தெரிவித்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் நபர்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்.
சந்தேக நபர் சில மாதங்களுக்கு முன்னர் மலேசியாவுக்கு சென்றிருந்தார். அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்பியபோதே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். அதன் பிரகாரம், சந்தேக நபரான பெண்ணை அன்றைய தினம் குருணாகல் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது,
3 இலட்சம் ரூபாய் அடிப்படையில் இரண்டு சரீர பிணையிலும், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் சந்தேக நபரை விடுப்பதற்கும், செப்டெம்பர் 6ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுப்பதற்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.