மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, மகனை வழிமறித்து துப்பாக்கி சூடு! தந்தை பலி, மகன் படுகாயம்...
வெலிகாம - தெனிபிட்டிய பகுதியில் தந்தை, மகன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு 9.40 மணியளவில் தெனி்பிட்டிய முல்லபொக்க பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பெலென பிரதேசத்தைச் சேர்ந்த கமல் சமிந்த என்ற 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாகவும், அவரது 20 வயது மகன் காயமடைந்து சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது, மகன் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவரை துரத்திச் சென்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரின் மார்பிலும் கையிலும் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் அங்கு சுமார் 20 தோட்டாக்களை பயன்படுத்தியதாக சிதறி கிடந்த தோட்டா கோப்புகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் பாதாள உலகக் குழு உறுப்பினர் எனவும், அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர்,
வெலிகம பொலிஸார் மற்றும் அருகிலுள்ள பல பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.