காணாமல் போனோருக்கு ஒரு நியாயம், கப்பலுக்கு ஒரு நியாயமா?

ஆசிரியர் - Admin
காணாமல் போனோருக்கு ஒரு நியாயம், கப்பலுக்கு ஒரு நியாயமா?

காணாமல் போனோர் விவகாரம்,யுத்தக் குற்றங்களுக்கு நியாயம் ஆகியவற்றுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு பெற்றுக் கொள்வதை நாட்டுக்கு எதிரான செயற்பாடு என்று குறிப்பிடும் தரப்பினர் எக்பிரஸ்பேர்ள் கப்பல் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளமை நகைப்புக்குரியது. அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை சர்வதேசம் கவனத்திற் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகி மூழ்கிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வளங்களுக்கும்,கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை பணத்தால் மாத்திரம் மதிப்பிட முடியாது.ஏற்பட்ட விபத்தின் தாக்கம் பல ஆண்டு காலங்களுக்கு தாக்கம் செலுத்தும் என சுற்றாடல் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

விபத்தினால் பாதிக்கப்பட்ட மேல் மாகாண மீனவர்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.ஏனைய மாகாணங்களில் உள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இவர்களுக்கும் அரசாங்கம் நட்டஈடு வழங்க வேண்டும்.

சிங்கப்பூர் நாட்டு நீதிமன்றத்தின் வழக்கு தாக்கல் செய்தால் தான் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.இது பல விடயங்களை எமக்கு நினைவுப்படுத்துகிறது.காணாமல் போனோரின் உறவுகளுக்கும்,யுத்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச நீதி விசாரணை அவசியம் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இலங்கையின் உள்ளக விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால் அது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும், எதிர்க்கட்சிகளும் குறிப்பிடுகின்றன.

எமது பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது முறையற்றது என்றால் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்.தேசிய மட்டத்தில் நீதித்துறையின் மீது நம்பிக்கை இருந்தால் இங்கு வழக்கு தாக்கல் செய்யலாம் தானே.இவர்களின் இரட்டை நிலைப்பாட்டை சர்வதேசம் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு