ஒரே குழந்தையின் உடலில் 3 பெற்றோரின் டி.என்.ஏ!! -பிரித்தானியாவில் ஆச்சரிய சம்பவம்-
பொதுவாக, ஒரு குழந்தையின் உடலில் அதன் தந்தை மற்றும் தாய் ஆகியோரின் டி.என்.ஏ (DNA) மட்டுமே இருக்கும். ஆனால், பிரித்தானியாவில் முதன்முறையாக 3 பேருடைய டி.என்.ஏ யுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
மனித உடல், பல செல்களால் ஆனது, அந்த செல்களுக்குள் பல நுண்ணிய உள்ளுறுப்புகள் உள்ளன, அவற்றில் ஒன்று மைட்டோகாண்ட்ரியா.
உணவை ஆற்றலாக மாற்றும் பணியை இந்த மைட்டோகாண்ட்ரியா செய்கிறது. ஒரு சில குழந்தைகள், இந்த மைட்டோகாண்ட்ரியாவில் ஏற்படும் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றன.
இந்த மைட்டோகாண்ட்ரியா, உணவை ஆற்றலாக மாற்றும் பணியை செய்வதால், அதில் பிரச்சினை உள்ள குழந்தைகள், மூளையில் பாதிப்பு, தசை இழப்பு, இதயப் பிரச்சினைகள், கண் பார்வையின்மை முதலான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றன, மரணமும் ஏற்படலாம்.
ஆகவே, ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியா கொண்ட ஒரு பெண்ணின் மைட்டோகாண்ட்ரியாவை, ஆய்வகத்தில் செயற்கை கருத்தரிப்பு முறையின்போது, குழந்தையின் தாய் தந்தையின் உயிரணுக்களை இணைத்து உருவாக்கப்படும் கருமுட்டையுடன் இணைக்கும்போது, அந்தக் குழந்தை இந்த மைட்டோகாண்ட்ரியா பிரச்சினையின்றி பிறக்கிறது என்பதுதான் இந்த திட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு.
விடயம் என்னவென்றால், மைட்டோகாண்ட்ரியாவை எந்த பெண்ணிடமிருந்து பெறுகிறார்களோ, அந்த மைட்டோகாண்ட்ரியாவில் அவருடைய டி.என்.ஏ யும் இருக்கும். ஆகவே, குழந்தையின் உடலில் மூன்று பேருடைய டி.என்.ஏ இருக்கும்.
ஆனாலும், பெருமளவு டி.என்.ஏ அந்தக் குழந்தையின் தாய் மற்றும் தந்தையிடமிருந்தும், சுமார் 0.1 சதவிகித டி.என்.ஏ மட்டுமே மைட்டோகாண்ட்ரியா தானம் செய்த பெண்ணிடமிருந்தும் அந்த குழந்தைக்கு செல்லும்.
ஆகவே, குழந்தையின் உருவம், நிறம் போன்ற எந்த விடயங்களிலும் அந்த மைட்டோகாண்ட்ரியா தானம் செய்த பெண்ணின் குணாதிசயங்கள் இருக்காது என்பதால், அந்தக் குழந்தைக்கு மூன்றாவதாக ஒரு பெற்றோர் என்னும் நிலையை அது ஏற்படுத்தாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த வகையான ஆய்வுக்கு சட்டப்படி 2015 ஆம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டாலும், இதுதான் பிரித்தானியாவில் முதன்முறையாக மைட்டோகாண்ட்ரியா தானம் பெற்று பிறந்த 3 டி.என்.ஏ கொண்ட குழந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.