SuperTopAds

மோட்டார் சைக்கிள் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஆசிரியர் - Editor III
மோட்டார் சைக்கிள் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு  திருடி செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் ஏதாவது தெரிந்திருப்பின் பொதுமக்கள்  பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  விஸ்ணு கோவில் வீதி பகுதியில் உள்ள  வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கறுப்பு மற்றும் சிவப்பு கலவை கொண்ட   பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஞாயிற்றுக்கிழமை(7) காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையில்  (150CC-EP -BFV-0050) இனந்தெரியாத இரு சந்தேக நபர்களினால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை(8) பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

வீட்டு உரிமையாளர் தனிப்பட்ட வேலை நிமிர்த்தம் வெளியில் சென்றிருந்த சமயம் இரண்டு சந்தேக நபர்கள் குறித்த வீட்டின் முன்னால்  நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை சிறு தூரம் உருட்டி சென்ற பின்னர் தலைக்கவசம் இன்றி குறித்த மோட்டார் சைக்கிளை இயக்கி பயணிப்பதை அருகில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய  பெரியநீலாவணை  பொலிஸார்    சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் இவ்வாறான சம்பவங்களை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும் களவாடி செல்லப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பிலோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பிலோ  ஏதாவது தகவல்களை  அறிந்திருந்தால் 071-8594528, 0672050674 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் பொதுமக்கள்  தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பெரிய நீலாவணை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் இவ்வருடம் மாத்திரம் பெரிய நீலாவணை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதுடன் 1 மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.