"சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை: 15 சதவீதம் விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படும்"
சர்ச்சைக்குரிய சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்துக்குப் பயன்படுத்தவுள்ள நிலத்தில் 15 சதவீதம் விவசாய நிலமாக இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பேசுபொருளாகிவிட்ட சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தின் தேவை என்ன, அதற்கான ஒப்புதல்கள் பெறப்பட்டுவிட்டனவா, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அரசுத் தரப்பிடம் இருந்து இதுவரை பதில்கள் இல்லாமல் இருந்தது.
எட்டுவழிச்சாலை கொண்டுவரப்படவுள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதும், விவசாயிகள் கைதுசெய்யப்படுவதும் தொடர்வதால், இந்த சாலைத் திட்டம் குறித்த கேள்விகளை பிபிசிதமிழ் மத்திய நெடுஞ்சாலைத் துறையிடம் வைத்தது.
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தில், விரைவுப்பதைகளுக்கென இயங்கும் தனிப்பிரிவின் தலைமை பொது மேலாளர் மனோஜ் குமார் அளித்த பதில்கள் இவை.