திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை விரிவுபடுத்த எல்லை கிராமங்களில் தொன்மையான சைவ ஆலயங்கள் இடிப்பு! மணற்கேணி மற்றும் வெடுக்குநாறியில் அட்டூழியம்...
முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் மேலும் சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்ளும் நோக்கிலேயே எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழர்களின் பூர்வீக சைவ வழிபாட்டு அடையாளங்கள் திட்டமிட்டு அரச திணைக்களங்களால் காணாமலாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் இடம்பெறும் பௌத்தமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் 26.03.2023 நேற்று நேரடியாக கள ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்குத்தொடுவாய் மக்களோடு மணற்கேணி என்னும் இத்திற்கு நாம் வருகைதந்திருந்தோம். இந்த மணற்கேணி என்னுமிடத்தில், தமிழர்களின் வழிபாட்டு அடையாளமான சிவலிங்கத்தை உடைத்திருப்பதாகவும் இங்கு பௌத்த மயமாக்கல் செயற்பாட்டிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இப்பகுதி மக்களால் எம்மிடம் முறையிடப்பட்டிருந்தது.
அவ்வாறு அவர்கள் முறையிட்டதற்கு அமைவாக நாம் இங்கு வருகைதந்து பார்வையிட்டபோது, இங்கு இருந்த சிவலிங்கத்தின் மேற்பகுதி உடைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் அடிப்பாகம் மற்றும் ஆவுடையார் பகுதிகள் இங்கே உடைந்த நிலையில் காணப்படுகின்றன.
இவ்வாறு காணாமல் ஆக்கும் வேலைகளை இலங்கை அரசாங்கத்தினுடைய திணைக்களங்கள் மிகக் கச்சிதமாக செய்துவருகின்றன. இந்தச் செயற்பாடு முல்வைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கெங்கும் சில அரசதிணைக்களங்கள் இவ்வாறான காணாமலாக்கும் வேலையை அவர்களுடைய எண்ணத்திற்கு ஏற்ப சரியாகச் செய்துவருகின்றனர்.
குறிப்பாக இந்த மணற்கேணிப் பகுதியைப் பொறுத்தவரையில் கடந்த 1970ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் 36குடும்பங்கள் இப்பகுதியிவ் இருந்ததாகவும், 200இற்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு இப்பகுதியில் வயல் நிலங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.இவ்வாறாக இப்பகுதியிலிருந்த தமிழ்மக்களால் வழிபடப்பட்டுவந்த சிவன் ஆலயமே தற்போது உடைக்கப்பட்டு காட்சிதருகின்றது.
இந்நிலையில் தற்போது இந்த இடங்களைப் பௌத்தமயமாக்கும் வேலைப்பாடுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும், வண்ணாமடு என்ற இடத்திலும், மணற்கேணி என்ற இந்த இடத்திலும், கற்றூணடிப் பகுதியிலும் விகாரைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக எமது தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்களில் விகாரைகளை அமைத்து, தமிழர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் தனது திணைக்களங்களினூடாக செய்துவருகின்றது. அதேவேளை இந்த பகுதிகளில் தாங்கள் வாழ்ந்ததற்குரிய ஆவணங்கள் பல தம்மிடம் இருப்பதாக இப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப்பகுதிகளில் கூட்டுறவுச்சங்கங்கள், கால்நடைப் பண்ணைகள், விவசாய பண்ணைகள் என இந்த பகுதிகள் சிறப்பாக இருந்ததை இப்பகுதி மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.இந் நிலையில் இவ்வாறான இந்த ஆக்கிரமிப்பாளர்களின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது,
இப் பகுதிகளில் எமது மக்களை சிறுபான்மையினராக்கி, சிங்களவர்களை இப்பகுதியில் மேலும் குடியேற்றி பெரும்பான்மையினராக்கும் வகையில் குடியேற்றங்களை மேற்கொள்ளப்போகின்றார்கள் என்பதை இவ்விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றார்.