நியூசிலாந்திடம் மோசமாக தோற்ற இலங்கை அணி!! -உலகக்கிண்ண போட்டிக்கு நேரடி தகுதி பெறும் வாய்ப்பு மேலும் நெருக்கடியானது-
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது.
ஆக்லேண்ட் ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியின் முதல் இலக்கு 36 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதும் அதன் பின்னர் களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் சராசரியான பங்களிப்பினை வழங்கினர்.
இதன்படி நியூசிலாந்து அணி 49.3 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகம் கொடுத்து 274 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன அபாரமாக பந்துவீசி 4 இலக்குகளையும், லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
275 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்துக்கு முகங்கொடுத்தது. குறிப்பாக நுவனிந்து பெர்னாண்டோ 3 ஆவது பந்துப்பரிமாற்றத்தின் போது ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக இலக்குகளை பறிகொடுக்க தொடங்கியது இலங்கை அணி.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் வந்தவேகத்தில் இலக்குகளை பறிகொடுத்து களத்திலிருந்து வெளியேற, 19.5 பந்துப்பரிமாற்றங்களில் வெறும் 76 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து சார்பாக ஹென்ரி சிப்லி அபாரமாக பந்துவீசி தன்னுடைய சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்தார். இவர் 5 இலக்குகளை வீழ்த்த, டெரைல் மிச்சல் மற்றும் பிளயர் டிக்னர் ஆகியோர் தலா 2 இலக்ககளை வீழ்த்தினர்.
அதேநேரம் இந்த 76 என்ற ஓட்ட எண்ணிக்கையானது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இலங்கை பெற்றுக்கொண்ட மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு 112 ஓட்டங்களை இலங்கை அணி பதிவுசெய்திருந்தது.
அதுமாத்திரமின்றி உலகக்கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெறுவதற்கான இலங்கை அணியின் வாய்ப்பு மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அடுத்த 2 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றாலும், தென்னாபிரிக்க அணி தங்களுடைய அடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் இலங்கை அணியால் நேரடி தகுதியை பெற்றுக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.