SuperTopAds

மோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது! அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள்!!

ஆசிரியர் - Editor II
மோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது! அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள்!!

புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் "கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வோம்" என்று  பாஜக கூறியது.

ஆனால் நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகும் பாஜகவின் மேற்சொன்ன வாக்குறுதிகள் அமித்ஷா முன்பு கூறியதைப் போல் வெறும் ஜுமலாவாக(மாயாஜால வார்த்தை) போய் விட்டது. நாட்டின் கல்வி வளர்ச்சியிலும் இது போலி வாக்குறுதியாகி விட்டது தற்போது தெரியவந்துள்ளது. இந்தியாவின் மிகமுக்கிய கல்வி நிறுவனங்களான அய்த ராபாத் மத்திய பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், இதர தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள், சென்னை அய்.அய்.டி., பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்றவைகளில் கடந்த 4 ஆண்டுகளாக கல்வித்தரம் தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறது.  அதே நேரத்தில் மத்திய அரசின் நேரடித்தலையீடுகள் என்பது கல்வி நிறு வனங்களில் அதிகரித்துள்ளன.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (யூபிஏ)

பாஜக தலைமையிலான ஆட்சி ஆணவ மற்றும் அதிகார பலத்தோடு அனைத்துத் துறைகளிலும் தங்களது கொள்கை களைத் திணித்தது. இதில் கல்வித்துறை மட்டும் விதி விலக்கல்ல; கல்வித்துறையில் தனியார் மயம், நீட் தேர்வுகள், வணிக நோக்கம் போன்ற கொள்கைகளால் இந்தியக் கல்வித்துறை சிக்கித்தவிக்கிறது. முந்தைய மன்மோகன் சிங் ஆட்சி கல்வித்துறையில்,  கல்விக் கொள்கையில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மேலும் கல்வியில் லாபம் பார்க்கும் வகையில் முந்தைய அரசின் கொள்கைகள் இருந்ததில்லை. பத்தாண்டு யூபிஏ ஆட்சி காலத்திலும் மாநிலக்கட்சிகளின் அழுத்தம் காரணமாக கல்வித்துறை தனித்துவம் பெற்று விளங்கியது. ஆனால் மோடி ஆட்சியில் கல்வித்துறை என்பது பாஜகவின் தாயமைப்பான ஆர்.எஸ்.எஸ். கைகளில் முழுமையாக போய்விட்டது. முக்கிய மாக சுதந்திரமான கல்வி அமைப்பானது மத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது, கல்விநிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரமுகர்கள் தொடர்ந்து நியமிக் கப்பட்டு வருகின்றனர். மிக முக்கியவரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் புராணம் மற்றும் சாஸ்திரங்களில் கூறப்படும் கதைகளின் அடிப்படையில் மாற்றிக்கொண்டு வருகின்றனர். போலி அறிவியல்கருத்துக்கள், மூடநம்பிக்கை பாடங்கள், வன்முறையுடன் கூட மதநடவடிக்கைகளை சரி என்று கூறும் பார்வைகொண்ட பாடங்கள் மாணவர்களுக்கு வலிந்து போதிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் மனதில் நிரந்தரமாக ஒருவித பகைக்குணம், வெறுப்பு வளர்ந்து விடுகிறது. இதனால் படிக்கும் மாணவர்களின் மூளைத்திறன் பாதிக்கப்பட்டு அவர்கள் வன் முறைகளையே சரி என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

புதிய கல்விக்கொள்கை

பிரதமர் மோடி  2014 ஆம் ஆண்டு பதவி ஏற்ற உடனேயே 100 நாட்களுக்குள் புதிய கல்விக்கொள்கை வகுக்கப்படுமென்று அறிவித்தார். அதாவது பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த கல்விக்கொள்கையை கொண்டு வருகிறோம் என்பதை நேரடியாகக் கூறாமல் கல்விக்கொள்கை மாற்றம் என்று கூறி வந்தார். ஆனால் புதிய கல்விக் கொள்கைகள் மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் மிகவும் அபாயகரமானவைகளாக இருந்தன. அரசாமைப்புச் சட்டத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட வகுப்பினருக்கான தனிக்கல்வி என்று பட்டவர்த்தனமாகச் செயல்படுத்தி வருகிறது. தனியார் கல்வி நிலையங்களில் பணம் இருந்தால் மட்டுமே கல்வி கற்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

பொதுவாக பாதுகாப்பு, கல்வி, தொழில் வளர்ச்சிக்கு அதிக அளவு நிதி ஒதுக்கவேண்டும், ஆனால் இந்த அரசு தலைகீழாக தனியாருக்கு ஏற்றவாறு தொழில் கொள்கையில் மாற்றம் செய்து பெருமுதலாளிகளுக்கு ஏற்றவகையில் கொள்கைமுடிவுகளை எடுத்து, அதன் மூலம் அதிக அளவு நிதியை தனியார் மயமாக்குவதில் ஒதுக்கியுள்ளது. கல்வி மற்றும் பாதுகாப்பிற்கான நிதியை பெருமளவில் குறைத் துள்ளது. 'த எகனாமிக்' இதழ் நடத்திய ஆய்வில் ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்து, மதிய உணவுத்திட்டம் போன்றவற்றில் நிதியைப் பெயரளவிற்கு மட்டுமே ஒதுக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. பெயரளவிற்கு ஒதுக்கிய நிதி நிர்வாகிகளின் சம்பளத்திற்குக்கூட போதாது என்று மத்திய குழந்தைகள் கல்வி மற்றும் நல ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். அதாவது குழந்தைகள் நாட்டின் எதிர்காலம்; அவர்களுக்கு ஊட்டச்சத்து கொடுக்காமலும், கல்வியைக் கொடுக்காமலும் முக்கியமாக மதிய உணவுத் திட்டத்தை தடுக்கும் நோக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.    உயர் கல்விக்கான கல்விக்கடன் தருவதை தற்போது மத்திய அரசின் பல்வேறு விதிமுறைகள் தடுத்து வருகின்றன. இதன் காரணமாக மேற்கல்வி பயில இயலாமல் மாணவர்கள் கல்வியைக் கைவிட்டு வேலைக்குச் செல்லும் அபாயம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டு வருகிறது.

இந்துத்துவ கல்வி மயம்

கடந்த நான்கு ஆண்டுகளாக கல்விமுழுவதுமே காவி மயமாகிவிட்டது. முக்கியமாக தீனாநாத் பத்ரா போன்ற வர்களின் கைகளில் கல்வித்துறை பாடங்கள் தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவர் பதவி சென்றுவிட்டது. அவர்கள் தங்கள் நூல்களில் எழுதிய புராண கட்டுகக்தைகளை உண்மைகள் என்று நிருபிக்க அவர்கள் நடத்திய ஆய்வுகளை பள்ளி/கல்லூரி பாடங்களில் திணித்துவிட்டனர். சுதர்ஷன் ராவ், போன்றவர்களின் கைகளில் இந்திய வரலாற்று ஆய்வுக் கலாச்சார அமைப்பு சென்றுவிட்டது. இந்த அமைப்புதான் வரலாற்றுக் கல்வியை கட்டமைப்பதில் தலைமை நிலையமாக உள்ளது. கல்வியில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த சீரழிவுகளை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஊடகங்கள் மவுனம் காட்டி வருகின்றன. இந்த அரசின் அனைத்துத் திட்டங்களையும் வெற்றிகரமான திட்டங்கள் என்றுதொடர்ந்துகூறுவதே பெரும்பான்மை ஊடகங்களின் திட்டமாக இருப்பதால் மோடி தலைமையிலான அரசு சீரழித்த கல்வித்துறையின் மோசமான நிலை இன்று மெல்ல மெல்ல வெளியே வரத்துவங்கிவிட்டது,