துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் பிரகாசித்த யாழ்.மத்திய கல்லூரி!! -இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் யாழ்.பரியோவான் கல்லூரி-

ஆசிரியர் - Editor II
துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் பிரகாசித்த யாழ்.மத்திய கல்லூரி!! -இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் யாழ்.பரியோவான் கல்லூரி-

'வடக்கின் போர்' கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் தமது ஆதிக்கத்தை யாழ்.மத்திய கல்லூரி அணியினர் செலுத்தியுள்ள நிலையில், இனிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக யாழ்.பரியோவான் கல்லூரி போராடிவருகின்றது.

'வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரிக்கும் யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 116 ஆவது போட்டி யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.பரியோவான் கல்லூரி முதலில் களத்தெடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.மத்தகய கல்லூரி தனது முதல் இனிங்ஸில் 66 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி சார்பில் அஜய் 74 ஓட்டங்களையும், விதுஷன் 71 ஓட்டங்களையும் சன்சஜன் 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் யாழ்.பரியோவான் கல்லூரி சார்பில் அபிஷேக் 3 இலக்குகளையும், கஜகர்ணன், விதுஷன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தனது முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்.பரியோவான் கல்லூரி 51.2 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ்.பரியோவான் கல்லூரி சார்பில் பென்சர் ஜெசியல் 43 ஓட்டங்களையும், சபேசன் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்.மத்திய கல்லூரி சார்பில் நியூட்டன் 4 இலக்குளையும், கஜன் 3 இலக்குகளையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த மத்தியகல்லூரி பலோன் முறையில் இரண்டாம் இனிங்சிற்காக முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்பத்தை யாழ்.பரியோவான் கல்லூரிக்கு வழங்கியது.

அதன்படி இரண்டாம் இனிங்ஸ்ற்காக துடுப்பெடுத்தாடிவரும் பரியோவான் கல்லூரி 42 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகம்கொடுத்து 7 இலக்குகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றபோது இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

துடுப்பாட்டத்தில் யாழ்.பரியோவான் கல்லூரி சார்பில் ஜனந்தன் 26 ஓட்டங்களையும், பென்சர் ஜெசியல் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்.மத்திய கல்லூரி சார்பில் பருதி 4 இலக்குகளையும், நியூட்டன் 3 இலக்குகளையும் கைப்பற்றினர். 

நாளை சனிக்கிழமை மூன்றாம் நாள் ஆட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு