SuperTopAds

உத்தரப்பிரதேசம்: பசுவை திருடியதற்காக முஸ்லிம் நபர் கொல்லப்பட்டாரா?

ஆசிரியர் - Editor II
உத்தரப்பிரதேசம்: பசுவை திருடியதற்காக முஸ்லிம் நபர் கொல்லப்பட்டாரா?

மண்ணில் சிதறிய செந்நிறத் துளிகள் இங்கு யாரோ ரத்தம் சிந்தியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. கும்பல் ஒன்று ஒருவரை அடித்துக் கொன்றதும், கொலை செய்யப்பட்ட நபர் ஒரு முஸ்லிம் என்பதும், இதில் மாடுசம்பந்தப்பட்டிருக்கிறதா என்பதுதான் விவாதத்தின் மையப்பொருள்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதாபுர் கிராமத்தில் வசிப்பவர் முகமது காசிம், இவர் ஒரு பசுவை திருடியதற்காக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலிசார் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில், 'ரோட் ரேஜ்' (சாலையில் நடந்த சண்டை) காரணமாக கொல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 60 வயது முதியவர் சமிவுதீனும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் இரு தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபுட் மாவட்டத்தில் நடைபெற்றது.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கும் சமிவுதீனின் அண்ணன் மகன் முகமது வகீல். 'அன்று சித்தப்பா கால்நடைகளுக்கு தீவனங்கள் கொண்டு வர வயலுக்கு சென்றிருந்தார். அவருடன் பேசுவதற்காக காசிம் அங்கு வந்தார்' என்று சொல்கிறார்.

பஹைடா குர்த் கிராமமும் மதாபுர் முஸ்தாபாத் கிராமமும் அண்டை கிராமங்கள்.

ராஜ்புத்திர இன மக்கள் ஆதிக்கம் நிறைந்த அருகிலுள்ள பஹைடா குர்த் கிராமத்தில் இருந்து, மேய்ச்சலுக்காக மதாபுருக்கு மாடுகள் வரும்.

பஹைடா கிராமத்தினர் வேண்டுமென்றே மேய்ச்சலுக்காக மாடுகளை அனுப்புகிறார்கள் என்பது முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த மதாபுர் முஸ்தபாபாத் கிராமத்தில் வசிக்கும் மக்களின் கருத்து .

ஆனால், மேய்ச்சலுக்காக வரும் ஆடு மாடுகளை தாங்கள் கொன்று சாப்பிடுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருவதாக மதாபுர் முஸ்தஃபாபாத் மக்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த மதாபுர் முஸ்தபாபாத் மற்றும் ராஜபுத்திரர்களின் ஆதிக்கம் கொண்ட பஹைடா குர்த் கிராமமும் அடுத்தடுத்து உள்ளன. கிராமத்தில் கோயில்கள், மசூதிகள், கடைகள், வீடுகள், பண்ணைகள் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று அருகில் அமைந்துள்ளன.

கும்பலிடம் சிக்கி 45 வயதான காசிம், கொல்லப்பட்ட இடத்திற்கு சமிவுதீனின் அண்ணன் மகன் முகமது வகீல் எங்களை அழைத்துச் சென்றார்.

பல்வேறு மரங்களுடன் பச்சை பசேலென்று இருந்த வயல் மண்ணில் ரத்தத்துளிகள் இன்னமும் மறையவில்லை. அந்த சம்பவத்திற்கு சாட்சியாக பிய்ந்துபோன சிவப்பு நிற செருப்பு ஒன்றும் கிடக்கிறது. யாரோ ஓட முயன்றபோது பிய்ந்து போயிருக்கலாம்.

அது காசிமுடையதா அல்லது சமிவுதீனுடையதா? தெரியாது.

சம்பவம் தொடர்பாக பஹைடா குர்த் கிராமத்தை சேர்ந்த இருவரை கைது செய்த போலிசார், தாக்குதல், கலகம் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியது தொடர்பாக (இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302, 307, 147, 148)இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை அதிகாரி சங்கல்ப் ஷர்மாவின் கருத்துப்படி, "இரு தரப்பினரும் கூட்டத்தாரை தூண்டிவிடுவதில் ஈடுபட்டிருந்ததாக போலிசார் கருதுகின்றனர்."

இந்த இரு கிராமங்களில் இருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் பில்குவா நகரில் சிதீக்புரா முகல்லே பகுதியில் இரு மாடி கொண்ட வீட்டில் ஒரு அறையில் வாடகைக்கு வசிக்கிறார் காசிம்.

கால்நடை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் காசிமின் சகோதரர் முகமது நதீம், தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக சொல்கிறார். தனது சகோதரரை அடித்துபோட்டு விட்டார்கள் என்ற தகவலை கேட்ட உடனே மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால் அதற்குள் காசிம் இறந்துவிட்டார்.

நல்ல விலைக்கு எருமைகள் கிடைக்கும், அதை வாங்கலாம் என்ற நினைப்பில் வீட்டில் இருந்து சகோதரர் 60-70 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு சென்றதாக சொல்லும் நதீம், கும்பல் ஒன்று அவரை சுற்றி வளைத்து அடித்து கொன்றுவிட்டதாக கூறுகிறார்.

உடல் கூறாய்வுக்கு பிறகு காசிமின் உடல் மதியம் 2.30 மணிக்கு கொடுக்கப்பட்டது, செவ்வாய்கிழமை காலையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று குடும்பத்தினர் சொல்கின்றனர்.

காசிமின் சகோதரர் சலீமை முக்கிய சாட்சியாக வழக்கில் இணைத்துக் கொள்வதாக போலிசார் கூறியிருக்கின்றனர்.

ஆனால் முகமது சலீம் "ஒரு குற்றத்திற்கு இரண்டு வழக்கு பதிவு செய்யமுடியாது என்று போலிசார் கூறினார்கள்" என்கிறார்.

''காயமடைந்த சமிவுதீன் மற்றும் பிறர் ஒருவேளை எதிர் தரப்பினருடன் சமரசமாக போனால் எங்கள் பாதிப்புக்கு என்ன வழி?'' என்று வருத்தப்படும் சலீம், இதையே போலிசாரிடமும் தெரிவித்திருக்கிறார்.

ஜூன் 18ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சமீவுதினின் சகோதரர் முகமது யாசீன் கொடுத்த புகார் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் முகம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் பஹைடாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், சமாவுதீன் மீது மோதியதாகவும் அதில் சண்டை மூண்டதில், பஹைடாவில் இருந்து 25-30 பேர் கொண்ட கும்பல் வந்து சமிவுதீன் மற்றும் காசிமை தடிகளால் தாக்கினார்கள் என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 19 அன்று 'அமர் உஜாலா' செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தி இடம்பெற்றது. இந்த செய்தித்தாளில் மாடு மற்றும் கன்றும், சில போலிசாரும் இருக்கும் படம் இடம்பெற்றிருந்தது . சம்பவ இடத்தில் இருந்த 'மீட்கப்பட்ட மாடு' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. "இரண்டு மாடுகளும் ஒரு கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன" என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

பஹைடா கிராமத்தில் இருந்து மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை மதாபூர் முஸ்தாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அடித்து கொல்வதாக எழுந்த சந்தேகமே இந்த சம்பவத்தின் பின்னணி என சிலர் கருதுகிறார்கள்.