பாகிஸ்தான் மகளிர் ரி-20 லீக்கில் களமிறங்கும் சமரி அத்தபத்து
பாகிஸ்தானில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் ஓர் அங்கமாக அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிருக்கான ரி-20 கண்காட்சி போட்டித் தொடரில் சூப்பர் பெண்கள் அணிக்காக இலங்கையின் அதிரடி வீராங்கனை சமரி அத்தபத்து விளையாடவுள்ளார்.
அமேசன் மற்றும் சுபர் வுமண் ஆகிய இரு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடரில் 3 ஆட்டங்கள் ராவல்பிண்டியில் நாளை புதன்கிழமை மற்றும் 10, 11 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள முதலாவது கண்காட்சி ரி-20 போட்டி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாகவும், 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது கண்காட்சிப் போட்டி மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிஸ்மாஹ் மஹ்ரூப் அமேசன் அணியின் தலைவியாகவும், நிதா தார் சுபர் வுமண் அணியின் தலைவியாகவும் செயல்படவுள்ளனர்.