SuperTopAds

நாட்டின் சட்டத்தையே உதாசீனம் செய்யும் பௌத்த தர்மம்! மாவை காட்டம்...

ஆசிரியர் - Editor I
நாட்டின் சட்டத்தையே உதாசீனம் செய்யும் பௌத்த தர்மம்! மாவை காட்டம்...

முல்லைத்தீவு - குருந்துார் மலையில் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் அதனை மீறி விகாரை கட்டப்பட்டமை பௌத்த தர்மமா? என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா கேள்வி எழுப்பியிருக்கின்றார். 

குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த விகாரை அமைக்கப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 

முல்லத்தீவு நீதிமன்றத்தினால் குருந்தூர் மலையில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைப்பது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு பொலிசாருக்கு தடை உத்தரவு வழங்கி இருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மாதிரி பௌத்த தேரர்களின் அனுசரணையுடன் விகாரை அமைத்து முடிக்கப்பட்டது. பௌத்த தர்மம் அதன் போதனைகள் இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சட்டங்களை மீறும் வகையில் பெளத்த தேரர்கள் செயற்பட்டமை நேரடியாகப் புலப்படுகிறது.

குறித்த செயற்பாட்டு நீதிமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயலாக பார்ப்பதோடு பௌத்த மதத்தையும் அவ மதிக்கும் ஒரு செயலாகப் பார்க்கிறேன். 

ஆகவே ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சட்ட விரோதமான முறையில் நீதிமன்றத்தை அவமதித்து கட்டப்பட்ட விகாரை தொடர்பில் நீதிமன்றம் உரிய கரிசனை செலுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.