கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தவரை பிடித்து கட்டிவைத்து தாக்குதல், கால்நடைகளை திருடவும் முயற்சி! தொடரும் அடாவடி...
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், சிவந்தாமுறிப்பு பகுதியில் தமிழ் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் பெரும்பான்மை இனத்தவர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
பெரும்பான்மை இனத்தவர்கள் குறித்த தமிழ் கால்நடைவளர்ப்பாளருக்குச் சொந்தமான கால்நடைகளைத் திருடமுற்பட்டதாகவும் திருட்டமுயற்சியைத் தடுக்கும்போதே தாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் குறித்த கால்நடை வளர்ப்பாளர் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவரும் சிவக்கொழுந்து கந்தசாமி என்ற கால்நடை வளர்ப்பாளரே இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்களால் தாக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபரை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
அதேவேளை கொக்குத்தொடுவாய் பகுதி தமிழ் மக்களின் கால்நடைகளை வெலிஓயா பகுதியைச்சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தொடர்ச்சியாக திருடிவருவதாக அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு திருடப்படும்போது தடுக்கின்ற தமிழ் மக்களை, பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்குகின்ற சம்பவங்களும் தொடர்சியாக இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையில் முறுகலைத் தோற்றுவிக்கும் அபாயம் எழுந்துள்ளதாகவும் கொக்குத்தொடுவாய் பகுதி தமிழ்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலிரிடம் கொக்குத்தொடுவாய் மக்கள் முறையிட்டுள்ளனர்.
மேலும் இப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாணவேண்டும் என்பதே கொக்குத் தொடுவாய் தமிழ்மக்களின் கோரிக்கையாகவுள்ளது.