சுதந்திர தின சினேகபூர்வ துடுப்பாட்ட போட்டி!! -தம்புள்ளை அணியை 11 ஓட்டங்களால் வீழ்த்தியது யாழ்ப்பாண அணி-

ஆசிரியர் - Editor II
சுதந்திர தின சினேகபூர்வ துடுப்பாட்ட போட்டி!! -தம்புள்ளை அணியை 11 ஓட்டங்களால் வீழ்த்தியது யாழ்ப்பாண அணி-

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை மாவட்ட இளையோர் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ துடுப்பாட்ட போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த போட்டி இடம்பெற்றது.

குறித்த போட்டியை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மாவட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி 20 பந்துப் பரிமாற்றங்களில் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.

யாழ் அணி சார்பாக அணித்தலைவர் டிலக்சன் 38 ஓட்டங்களையும், விணோஜன் 31 ஓட்டங்களையும், கஜானன் 16 ஓட்டங்களையும் அதிகபக்சமாக பெற்றுகொடுத்தனர்.

பந்துவீச்சில் தம்புள்ளை அணி சார்பில் சிந்திஜ மற்றும் சங்கல்ப தலா 3 இலக்குகளை அதிகபட்சமாக கைப்பற்றனர்.

134 என்கின்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 19.1 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனால் 11 ஓட்டங்களால் யாழ்ப்பாண அணி வெற்றிபெற்றது.

தம்புள்ளை அணி சார்பாக ஹரித்த 25 ஓட்டங்களையும் ஷியாட் 20 ஓட்டங்களையும் அதிகபக்சமாக பெற்றுக்கொடுத்தர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாண அணி சார்பில் கவிசன் 3 விக்கெட்டுகளையும், சரன் மற்றும் மதுசன் தலா 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.

போட்டியின் சிறந்த வீரனாக யாழ்ப்பாண அணி தலைவர் டிலக்சன் தெரிவு செய்யப்பட்டடார். நிகழ்வின் இறுதியில் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த விளையாட்டு நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு