SuperTopAds

திருக்கோணேஷ்வரர் ஆலய திருப்பணியை இந்தியா கையேற்கவேண்டும், அகில இலங்கை இந்து மாமன்றம் ப.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை...

ஆசிரியர் - Editor I
திருக்கோணேஷ்வரர் ஆலய திருப்பணியை இந்தியா கையேற்கவேண்டும், அகில இலங்கை இந்து மாமன்றம் ப.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை...

நீண்டகாலமாக திருப்பணி செய்யப்படாத திருக்கோணேச்சரம் ஆலயத்தின் புனருத்தாரண பணிகளை இந்தியா செய்யவேண்டும். என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்திய மத்திய அமைச்சர் முருகன் மற்றும் ப.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

இந்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் இந்திய அரசிற்கு நெருக்கமான பிரமுகர் அண்ணாமலை ஆகியோர் நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்றபோது விடுவிக்கப்படாத காணிகள், தீர்க்கப்படாத தமிழர்களின் பிரச்சினைகளை இந்திய பிரதமருக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

 நீண்டகாலமாக தீர்க்கப்படாத தமிழர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா துரிதமாக செயற்பட வேண்டும். இருநூறு வருடங்கள் இலங்கை பொருளாதாரத்துக்கு உழைத்த மலையக மக்களுக்கு ஒரு துண்டு காணியில்லை. அவர்கள் தற்போதும் அடிமை வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். 

இந்துக்களின் புனித ஆலயமான திருக்கோணேச்சரம் இலங்கைக் கடற்படை ,தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகிறது. நீண்டகாலமாக செய்யப்படாத திருக்கோணேச்சரத்தின் திருப்பணியை இந்தியா செய்யவேண்டும். ஆலயம் அருகே பெட்டிக்கடைபோட்டு 

நிரந்தர கட்டடம் அமைக்க முயற்சிக்கப்படுகிறது. இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பிய போதும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்றார்.