அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!! -26 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு-
பொங்கல் பண்டிகையை அடுத்து உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் பெரும்பாலான காளைகள் கெத்து காட்டின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
விறுவிறுப்பாக மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. மொத்தம் 823 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இதில், அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் 26 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.