SuperTopAds

கல்முனை மாநகரில் மாபெரும் பொங்கல் விழா

ஆசிரியர் - Editor III
கல்முனை மாநகரில் மாபெரும் பொங்கல் விழா

அம்பாறை மாவட்டத்தின் பிரதான தைப்பொங்கல் திருவிழா _2022 கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பழைய பஸ் நிலையத்தில் இளைஞர் சேனை அமைப்பின் தலைவர் எம்.சங்கீத் தலைமையில்  கல்முனை வடக்கு பிரதேச செயலக அணுசரனையுடன் கோலாகலமாக  நடைபெற்றது.

இன்று(16) ஆரம்பமான இந்நிகழ்வில் இலங்கையின் தேசியக் கொடி,  தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் கொடி,  நந்திக்கொடி ,என்பன அதிதிகளால் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன் போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொங்கல் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் விழாவை ஆரம்பித்து வைத்தார். மேலும்   கௌரவ அதிதியாக    அம்பாறை  மாவட்ட  மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்  வே . ஜெகதீசன்  , கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர்   ரீ.ஜே . அதிசயராஜ், கலந்து கொண்டதுடன்   விசேட  அதிதிகளாக கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல்.புத்திக்க, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  ரம்சீன் பக்கீர் , வைத்தியர்  புஷ்பலதா லோகநாதன் ,கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகரும்  தற்போதைய தவிசாளருமான Bester  ஏ.எம்.றியாஸ்,அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ், கல்முனை வடக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.வசந்தி,   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் அதிதிகளை வரவேற்றல்,  கொடி ஏற்றல் , தேசிய கீதம்  இசைத்தல் , சேனையின் கீதம் இசைத்தல் , மங்கல விளக்கேற்றல்,  இறை வணக்கம்,  தமிழ்த் தாய் வாழ்த்து , ஆசியுரை  ,வரவேற்புரை , வரவேற்பு நடனம்  ,தலைமையுரை,  பொங்கல்பானை ஏற்றல்,  நடனம்,  விஷேட அதிதிகள் உரை,  நடனம்   ,அதிதிகள் உரை  ,நடனம் ,பிரதம அதிதி உரை , நன்றியுரை,  என இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் தமிழர் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டதுடன் கல்முனை உவெஸ்லி உயர்தர  மாணவர்களின் நடனம் விழாவிற்கு அழகு சேர்த்திருந்தது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்ளஸ் அங்கு  உரையாற்றும் போது இந்து மக்கள் மாத்திரமல்லாது மாவட்டத்தின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக தைப்பொங்கல் விழா காணப்படுகின்றது. மதங்கள்  இனங்கள் வேறாக இருந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப நாம் எல்லோரும் ஒரே மக்களாக செயற்பட வேண்டும்.  அம்பாறை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த  என்னை பிரதம அதிதியாக அழைத்து இப்படியான ஒரு கௌரவத்தை வழங்கிய இன்றைய நாளை என்னால் மறக்க முடியாது. இதனை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள் என்றார்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் அரசாங்க அதிபருக்கு தமிழ் இளைஞர்கள்   பொன்னாடை போர்த்தி  மாலைகள் அணிவித்து மகத்தான வரவேற்பு வழங்கினர்.

வருடா வருடம் கல்முனை பிரதான நகரம் தைப்பொங்கல் தினத்தன்று அலங்கரிக்கப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய கலாசார பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. மாட்டு வண்டிகள் ஊர்வலமாக சென்று தைப்பொங்கல் திருவிழா இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும் என்பதுடன் கடந்த ஆண்டும் இளைஞர் சேனை அமைப்பினரால் பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.